கடவுளே கோவிச்சுகிட்டா எவ்ளோ கஷ்டமா இருக்கும்- இளையராஜா குறித்து அழுதுகொண்டே பேசிய வனிதா
சினிமா
நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள படம் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்'. இந்தப் படத்தை அவரே எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். அவருடன் ராபர்ட் மாஸ்டர் இணைந்து நடித்துள்ளார்.
வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியானது.
இந்த நிலையில் வனிதா விஜயகுமார் படத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் சரவணன் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் அவசர முறையீடு செய்துள்ளார்.
அதில், வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' திரைப்படத்தில், என்னுடைய பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த படத்தில் இருந்து 'ராத்திரி சிவராத்திரி' என்ற பாடலை நீக்க வேண்டும் என்று இளையராஜா தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய வனிதா விஜயகுமார், "இளையராஜா எனக்கு கடவுள் மாதிரி, அந்த கடவுளே கோவிச்சுகிட்டா எவ்ளோ கஷ்டமா இருக்கும். சம்பந்தப்பட்ட இசை நிறுவனத்திடம் இந்த பாடலுக்கான உரிமையை வாங்கியுள்ளோம். அவர் வழக்கு தொடர்வதாக இருந்தால் அந்த நிறுவனத்தின் மீது தான் தொடர வேண்டும். சில விஷயம் இங்க பேச முடியாது.. உண்மைய சொன்னா தப்பா ஆகிடும்.. இளையராஜா வீட்டுக்கு மருமகளா போக வேண்டியது" என்று அழுதபடி தெரிவித்தார்.
























