யாதும் அறியான் படத்தில் விஜய் 2026-ல் முதல்வரானதாக காட்டப்பட்ட போஸ்டர் வைரல்
சினிமா
'செந்தூரா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கோபி. இவர் தற்போது 'யாதும் அறியான்' என்ற த்ரில்லர் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் லீட் ரோலில் அறிமுக நாயகன் தினேஷ் நடிக்க அவருடன் அப்பு குட்டி, தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர். பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தர்ம பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தை ஜூலை மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே, இத்திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் 2024 மற்றும் 2026 ஆகிய காலகட்டங்களில் கதை நடப்பது போன்று காட்சிகளை உருவாகியுள்ளது.
மேலும் இந்த டிரெய்லரில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசும் பொருளாகி உள்ளது. டிரெய்லரில் வரும் ஒரு காட்சியில் "தமிழகத்தில் இனி இலவசம் கிடையாது... இளைஞர், பெண்கள், விவசாயிகளுக்கு புது திட்டங்கள்! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு" என செய்தி மலர் நாளிதழின் சேலம் பதிப்பு 1.1 .2026 புதன்கிழமை என்று போஸ்டர் இடம்பெற்றுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி பணியாற்றி வரும் நிலையில், 2026-ல் வெற்றிபெற்று முதலமைச்சரானது போல் போஸ்டர் இடம்பெற்று இருப்பது பலரின் கவனத்தை ஈர்த்ததோடு பேசு பொருளாகவும் மாறியுள்ளது.























