• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பன்றியோடு சேர்ந்த கன்றும்...உன் நண்பன் யாரென்று சொல், நீ யாரென்று சொல்கிறேன்'

'உன் நண்பன் யாரென்று சொல், நீ யாரென்று சொல்கிறேன்' என்பது பிரபலமான ஒரு வாக்கியம். நாம் யாரோடு உறவு வைக்கின்றோமோ அதற்கேற்பவே நமது செயற்பாடுகளும் அமையும் என்பதே இதன் பொருள். பச்சையாகச் சொல்வதானால் நமது யோக்கியதையை நமது நண்பர்களில் இருந்து அறிந்து கொள்ள முடியும். இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட குண்டுத் தாக்குதல்களைப் பார்க்கும் போது இந்த வாக்கியம் நினைவுக்கு வருவதைத் தடுத்துவிட முடியவில்லை.
 

யூன் 22ஆம் திகதி ஈரான் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்திய பின்னர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள கருத்து இந்த வருடத்தின் அதி சிறந்த நகைச்சுவையாகப் பார்க்கப்படுகின்றது. ''இது சமாதானத்துக்கான தருணம்" என அவர் கூறியதை சாதாரண மனிதர்களால் கூட ஜீரணிக்க முடியாமல் போய்விட்டது. இத்தனைக்கும் தனது அணுசக்தித் திட்டம் தொடர்பில் அமெரிக்காவுடன் ஈரான் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையிலேயே இஸ்ரேலின் தாக்குதல் நிகழ்ந்தது. இந்தத் தாக்குதலை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் ஒருசில நாடுகள் தவிர்ந்த உலகின் பெரும்பாலான நாடுகள் கண்டித்துள்ள நிலையிலேயே அமெரிக்கத் தாக்குதலும் நிகழ்ந்துள்ளது.

பேச்சுவார்த்தைகளின் மீது நம்பிக்கை வைத்து ஒரு நாடு பேச்சுக்களில் ஈடுப்ட்டுக் கொண்டிருக்கும் போதே, அந்த நாட்டின் நல்லெண்ணத்தைத் தூக்கிக் கிடப்பில் போட்டுவிட்டு, அந்த நாட்டின் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்திவிட்டு, அந்த நாட்டை மீண்டும் பேச்சுக்களுக்கு அழைப்பது எந்த வகையான ராஜதந்திரம் என்பது புரியவில்லை. அமெரிக்கா எதனைச் செய்தாலும் அதற்கு முட்டுக் கொடுப்பதற்கென உலாவும் ஒரு கூட்டம் இதற்கும் ஏதாவது புதிய விளக்கம் தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அணுகுண்டு உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஈரானை, அந்த முயற்சியில் இருந்து தடுப்பதற்கே தான் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்த இஸ்ரேல், அணுசக்தி மையங்களின்மீது மாத்திரமன்றி வேறு பல படைத்துறை மற்றும் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தகைய இலக்குகளின் பின்னணி ஈரானின் ஒட்டுமொத்த வலிமையைக் குன்றச் செய்வதற்கே என்பது தெளிவாகப் புலனாகின்றது.
 
தனது தாக்குதலுக்கு ஈரான் வழங்கிய கடுமையான பதிலடி இஸ்ரேலோ அன்றி மேற்குலகமோ எதிர்பார்த்திராத ஒன்று. தனது பாதுகாப்பு ஏற்பாடுகளில் அதீத நம்பிக்கை வைத்து இஸ்ரேல் கட்டியெழுப்பியிருந்த பிம்பம் ஈரானின் பதில் தாக்குதல்கள் காரணமாக சிதைந்து போயுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர வேறு வழி தெரியாத நிலையில் அமெரிக்காவை இந்த மோதலில் இஸ்ரேல் வேண்டுமென்றே இழுத்து விட்டுள்ளது என்றே பார்க்கப்பட வேண்டும். இஸ்ரேலின் இரையை விழுங்கிய அமெரிக்காவும் வேறு வழியின்றி களத்தில் குதித்துவிட்டது.

மோதல் ஆரம்பமான போதில் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைத் தொடர்பு கொண்டு இடையீட்டாளராகச் செயற்பட உதவி கோரிய ட்ரம்ப் எதனால் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு தாக்குதல் முயற்சியில் இறங்கினார் என்பதற்கு அவர்தான் விளக்கம் கூற வேண்டும். ஆனால் அவரது நடவடிக்கை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அவரது ஆதரவாளர்களால் ரசிக்கப்படவில்லை என்பதை செய்திகள் வாயிலாக அறிய முடிகின்றது. தேர்தலில் வெற்றி பெற்று எட்டு மாதங்கள் முடிவதற்கிடையில் அவரது செல்வாக்கு உள்நாட்டில் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதைக் காண முடிகின்றது. போர்களை முடிவுக்குக் கொண்டுவரப் போவதாக அவர் வழங்கிய தேர்தல் வாக்குறுதி, அதனை நம்பி வாக்களித்த மக்களின் நம்பிக்கை என்பவை பொய்த்துப் போயுள்ளன.

அதேநேரம். அமெரிக்காவில் உள்ள யூத நலன்கள் தொடர்பில் பரப்புரை செய்யும் குழுமத்தின் செல்வாக்கு தொடர்பிலான விவாதங்கள் மேலெழும்பி உள்ளன. அமெரிக்க நலன்களை விடவும் உலகளாவிய அடிப்படையில் பார்க்கையில் யூத நலன்களை ஒருபடி மேலானதாகக் கருதும் நிலைப்பாடு உள்ளதை வெளிப்படையாகப் பார்க்கக் கூடியதாக உள்ளது. இரண்டாம் உலகப் போரில் தனியொரு இனமாக யூத இனம் பழிவாங்கப்பட்டது என்பதை மறுத்து விடுவதற்கில்லை. ஆனால், யூத இனத்தை விடவும் அதிகமான அழிவுகளை மேனாள் சோவியத் ஒன்றிய மக்களும், யேர்மன் மக்களும் சந்தித்தார்கள் என்பதுவும் நினைவில் கொள்ளத்தக்கது.

பாதிக்கப்பட்ட ஒரு இனத்தின் மீது அல்லது குழுமத்தின் மீது இரக்கம் கொள்வது இயல்பானதே. ஆனால், அதுவே ஏனையோர் மீதான கொடுமைகளை அரங்கேற்றுவதற்கான அனுமதி இல்லை என்பதை இஸ்ரேல் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், அதற்கான தன்முனைப்போ அல்லது ஏனையோரின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவமோ இஸ்ரேல் ஆட்சியாளர்களிடம் துளியளவு கூட இல்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகின்றது.

ட்ரம்ப் அவர்களின் வார்த்தைகளில் சொல்வதானால் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு உள்ளது. அதற்கு முன்பதாக ஈரான் மீது அமெரிக்க விமானத் தாக்குதல்களும், கட்டாரில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது ஈரானியத் தாக்குதல்களும் நடைபெற்று உள்ளன. பிராந்தியத்தை மாத்திரமன்றி முழு உலகத்தையுமே கலங்க வைத்த இந்தத் தாக்குதல் மற்றும் பதில் தாக்குதல் என்பவை ஓய்வுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியே. ஆனால், இந்த மோதலின் விளைவுதான் என்ன?
 
ஈரானின் அணு ஆயுதத் திட்டம் கைவிடப்பட்டு விட்டதா? அல்லது மேற்குலகம் கூறுவதைப் போன்று அணுவாயுதத்தைத் தயாரிக்கும் நோக்கத்திலிருந்து ஈரான் விலகி விட்டதா? வெளிவருகின்ற செய்திகளைப் பார்க்கும் போது ஈரானின் அணுவாயுதத் திட்டத்துக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஆதரவு பெருகி இருப்பதாகவே தெரிகின்றது. ஈரான் அரசுக்கு எதிராக இருந்த சிறிதளவு எதிர்ப்பு கூட உள்நாட்டில் மறைந்து நாட்டு மக்கள் அனைவருமே அரசாங்கத்துக்கு ஆதரவாக அணிதிரண்டு நிற்பதையும் பார்க்க முடிகின்றது. அதேவேளை, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றின் நடவடிக்கைகளை ஆதரிக்காத பல நாடுகள் ஈரானுக்குத் தமது ஆதரவையும், அனுதாபத்தையும் தெரிவித்து நிற்பதையும் காண முடிகின்றது.

மோதல் முடிவுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியே. ஆனால், அது நிலைக்குமா என்ற கேள்வி எழுகிறது. ஈரானின் அணுசக்தித் திட்டத்துக்கு வெளிப்படையாக தொடர்ச்சியான எதிர்ப்பை வெளியிட்டு வரும் இஸ்ரேல் கடந்தகாலத்தில் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் பல்வேறு வழிமுறைகள் ஊடாக ஈரான் மீதான தாக்குதல்களை நடத்தியே வந்துள்ளது. அது மாத்திரமன்றி தனது சார்பு நாடுகள் மூலமாக ஈரானுக்கு அழுத்தங்களையும் கொடுத்து வந்திருக்கின்றது. எனவே, இஸ்ரேல் பணிந்து விட்டது, ஈரான் எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கைவிட்டுவிட்டது என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. தன்னை மீண்டும் பலப்படுத்திக் கொண்டு, தனது ஆதரவு நாடுகளையும் துணைக்கு அழைத்துக்கொண்டு எதிர்காலத்திலும் ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடுக்கவே முனையும். உலக ஒழுங்கைப் பற்றியோ, பன்னாட்டுச் சட்டங்களைப் பற்றியோ கவலை கொள்ளாத இஸ்ரேல் ஆட்சியாளர்களிடம்; இருந்து இதைத்தவிர வேறு எதனையும் எதிர்பார்க்க முடியாது.

மறுபுறம், ஈரானும் சிறந்த பாடத்தைக் கற்றுக் கொண்டுள்ளது. தனது படைத்துறை வலிமை மாத்திரமே தற்காப்புக்கான சிறந்த வழி என்பதை அனுபவம் மூலம் கற்றுக் கொண்டுள்ள ஈரான் அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடும் என்பதை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
 
ட்ரம்ப் சொல்வதைப் போல, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், அது விரைவில் மீண்டும் ஆரம்பமாகக் கூடிய வாய்ப்பு உள்ளது என அவர் தெரிவித்துள்ளமை தீர்க்கதரிசனமான கூற்றே. 

சுவிசிலிருந்து சண் தவராஜா
 

Leave a Reply