காசாவில் அடுத்த வாரத்திற்குள் போர் நிறுத்தம் ஏற்படும் - டொனால்டு டிரம்ப்
காசாவில் அடுத்த வாரத்திற்குள் போர்நிறுத்தம் அமலுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இதனை தெரிவித்தார். மேலும், "காசாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதனால்தான் அங்கு நிறைய பணம் வழங்கப்படுகிறது. காசாவில் உள்ள மக்கள் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர்" என்று கூறிய டிரம்ப், காசாவில் உணவைத் திருடியவர்கள் மோசமானவர்கள் என்றும், அங்கு உணவு விநியோகம் திறமையாக செய்யப்படுகிறது என்றும் கூறினார்.
முன்னதாக காசாவில் உள்ள மனிதாபிமான அறக்கட்டளைக்கு 30 மில்லியன் டாலர் உதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்திருந்தது.
இதற்கிடையே இஸ்ரேலிய அமைச்சர் ரான் டெர்மர் அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு பயணம் செய்கிறார். இந்த சந்திப்பின்போது போது காசாவில் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரான் டெர்மர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் நம்பிக்கைக்குரியவர் ஆவார்.
நேற்று காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 62 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், இதில் 10 பேர் உதவி விநியோக நிலையத்தில் உணவுக்காக காத்திருந்தவர்கள் என்று காசா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






















