தாய்லாந்து மக்கள் எம்.ஜி.ஆரை நேசிக்கக் காரணம்!
சினிமா
பழைய நினைவுகளைப் பகிர்ந்த நடிகை கே.ஆர். விஜயா
நடிப்பாலும் மக்களின் மனம் கவர்ந்த புன்னகையாலும் 'புன்னகை அரசி' என்று மங்காப் புகழோடு விளங்கி வருபவர் கே.ஆர். விஜயா.
'நினைவில் நின்றவள்' என்கிற நாயகியை முன்னிறுத்திய படத்தில் நடித்த அவர், 'இந்து தமிழ் திசை’ இதழுக்காக அளித்த நேர்காணலில் இருந்து ஒரு பகுதி.
எம்.ஜி.ஆர். என்கிற ஆளுமையுடன் நடித்ததைப் பற்றி!
உடன் நடிப்பவர்கள் மீது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மிகுந்த அக்கறை காட்டுவார். யார் என்ன உதவி கேட்டாலும் மறுக்காமல் செய்வார்.
எப்படி எல்லாரிடமும் மரியாதையாக நடந்து கொள்வது. உடல் நலனைப் பராமரிப்பது என்பது குறித்து அறிவுரைகள் சொல்வார்.
அவர் சொன்ன காரணங்களைக் கேட்டதும் காலையில் 'பெட் காபி' குடிக்கும் பழக்கத்தை அடியோடு விட்டுவிட்டேன்.
'பணம் படைத்தவன்' படத்துக்காக கல்கத்தா சென்றோம். அங்கே எம்.ஜி.ஆருக்கு நடந்த தமிழ்ச் சங்க வரவேற்பின்போது, கூடியிருந்த மக்கள் கூட்டத்தில், என்னைப் பற்றியும் என் நடிப்புத் திறமை பற்றியும் எடுத்துச் சொல்லி அறிமுகப்படுத்திப் பெருமைப்படுத்தினார்.
இது அவருடைய தலைமைப் பண்புக்கு உதாரணம்.
எம்.ஜி.ஆர். உடனான மறக்க முடியாத அனுபவம் பற்றி!
அது 1973ஆம் வருடம். வெளிநாடுகளைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று என் கணவரிடம் கேட்டேன். இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், தாய்லாந்து என்று பல நாடுகளுக்கு அழைத்துச் சென்றார்.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் காரில் சென்றுகொண்டிருந்தோம். எங்களுக்காக அமர்த்தப்பட்ட கார் ஓட்டுநர் என் கணவருடன் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே வந்தார்.
நாங்கள் தமிழ்நாட்டின் சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்ததும், 'உங்களுக்கு எம்.ஜி.ஆரைத் தெரியுமா? என்று கேட்டார்.
ஆச்சரியத்துடன் 'நன்றாகத் தெரியுமே..' என்றோம்.
அவர் மேலும் உற்சாகமடைந்து தொடர்ந்து எம்.ஜி.ஆரைப். பற்றிச் சொன்னார்.
"1970 படப் பிடிப்புக்காக எம்.ஜி.ஆர். பாங்காக் வந்திருந்தார். அவர் படப்பிடிப்பு நடத்த இருந்த நாளன்று, தாய்லாந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த ஒரு ஸ்டண்ட் நடிகர் சண்டைக் காட்சியில் நடித்தபோது விபத்து ஏற்பட்டு இறந்து விட்டார்.
சினிமா படப்பிடிப்புகள் ரத்தாகிவிட்டன. எம்.ஜி.ஆரும் படப்பிடிப்பு நடத்தவில்லை. இதனால், அவருக்கும் நஷ்டம். என்றாலும், இறந்த ஸ்டண்ட் நடிகர் பற்றி விசாரித்து, நேரில் சென்று அந்த ஸ்டண்ட் நடிகரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதன் மூலம் பாங்காக்கில் அவர் ஒரே நாளில் பிரபலமாகிவிட்டார். அவரது மனிதாபிமானமிக்க அந்தச் செயல் எங்களைக் கவர்ந்துவிட்டது" என்றார்.
ஓட்டுநர் சொன்னதைக் கேட்டு நானும் என் கணவரும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தோம்.
https://cinirocket.com/k-r-vijaya-telling-about-mgr/
நன்றி: தி இந்து தமிழ் திசை






















