ஆஸ்கர் அகாடமியில் வாக்களிக்கும் உறுப்பினராக சேர கமல்ஹாசனுக்கு அழைப்பு
சினிமா
திரைத்துறையின் உச்சபட்ச அமைப்பாக ஆஸ்கர் அகாடமிக்கு புதிய உறுப்பினர்களாக இணைய நடிகர் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா உட்பட உலகம் முழுவதும் 534 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 26 அன்று அறிவிக்கப்பட்ட இந்த புதிய பட்டியலில், கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா மட்டுமின்றி, இந்தியாவைச் சேர்ந்த காஸ்டிங் டைரக்டர் கரண் மல்லி, ஒளிப்பதிவாளர் ரணபீர் தாஸ், காஸ்டியூம் டிசைனர் மாக்சிமா பாசு, ஆவணப்படத் தயாரிப்பாளர் ஸ்மிருதி முந்த்ரா மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் பாயல் கபாடியா ஆகியோரும் அடங்குவர்.
டேவ் பாட்டிஸ்டா, அரியானா கிராண்டே, செபாஸ்டியன் ஸ்டான், ஜேசன் மோமோவா, ஆப்ரி பிளாசா, கில்லியன் ஆண்டர்சன், ஜெர்மி ஸ்ட்ராங் போன்ற சர்வதேச நட்சத்திரங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் அனைவரும் உறுப்பினராக சம்மதித்தாள், அகாடமியின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 11,120 ஆகவும், வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10,143 ஆகவும் உயரும். கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா ஆகியோர் வாக்களிக்கும் உறுப்பினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
அகாடமியில் உறுப்பினராவதற்கு விண்ணப்பங்கள் இல்லை. மாறாக, வேட்பாளர்கள் அகாடமியின் இரண்டு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட வேண்டும்.
2025 ஆம் ஆண்டிற்கான இந்த புதிய உறுப்பினர்களில் 41% பெண்கள், 45% பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள், மற்றும் 55% அமெரிக்காவிற்கு வெளியே உள்ள 60 நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.
2026 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி ஆஸ்கர் விருதுகள் விழா நடைபெற உள்ளது. பரிந்துரைக்கான வாக்களிப்பு ஜனவரி 12 முதல் ஜனவரி 16 வரை நடக்கும். ஜனவரி 22 ஆம் தேதி அதிகாரப்பூர்வ பரிந்துரைகள் அறிவிக்கப்படும். பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நகைச்சுவை நடிகர் கொனான் ஓ'பிரையன் ஆஸ்கர் விருதை தொகுத்து வழங்கவுள்ளார்.























