மெக்சிகோவில் மத கொண்டாட்ட நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு - 12 பேர் பலி
மெக்சிகோவின் குவானா ஜுவாடோ மாகாணத்தில் உள்ள இரபுவாடோ நகரில் மத கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்கள் புனித யோவானுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சாலைவில் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மர்ம நபர்கள் துப்பாக்கிகளுடன் அங்கு வந்தனர். அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் பொதுமக்கள் அலறியடித்தபடி ஓடினர். துப்பாக்கி சூட்டில் பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.
பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த தாக்குதலில் ஒரு சிறுவன், 2 பெண்கள் உள்பட 12 பேர் பலியானார்கள். 20 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த தாக்குதலுக்கு மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது என்றார்.
துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க கூட்டத்தினர் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் தப்பி ஓடும் வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.
மெக்சிகோ நகரத்தின் வடமேற்கே அமைந்துள்ள குவான்ஜுவாடோ, அந்நாட்டின் மிகவும் வன்முறை நிறைந்த மாகாணங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த மாதம் குவானாஜு வாடோவின் சான் பார்தோ லோடி பெர்ரியாஸ் நகரில் கத்தோலிக்க திருச்சபை ஏற்பாடு செய்த விருந்து நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.






















