• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வடக்கு மாகாண ஆளுநர்- யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி இடையே விசேட சந்திப்பு

இலங்கை

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் ராசிக குமாரவுக்கும் இடையிலான சம்பிரதாயபூர்வ சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று காலை (26) நடைபெற்றது.

சந்திப்பின்போது வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த ஆண்டு விவசாயத் தேவைக்காக விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளுக்கு அண்மையாக அமைந்துள்ள இராணுவ வேலியை பின்நகர்த்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மேலும், மக்களிடம் காணிகளை மீளக்கையளிக்கும்போது அங்கு களவுகள் இடம்பெறுவதாக மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அதற்கு அமைவான பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் அவற்றைக் கையளிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரினார்.

வடக்கில் நிலவும் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனை தொடர்பிலும் இராணுவத் தளபதி ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார். உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு நிலையத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இந்தச் சந்திப்பின் இறுதியில் நினைவுச் சின்னங்களை ஆளுநரும், இராணுவத் தளபதியும் பரிமாறிக்கொண்டனர்.
 

Leave a Reply