அணு ஆயுதத்தை தயாரிக்க மீண்டும் முயற்சிக்க கூடாது- ஈரானுக்கு அமெரிக்க துணை அதிபர் எச்சரிக்கை
கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று இரவு ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்கியது.
அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது.
கடந்த ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது.
இந்நிலையில் ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார்.
இதனையடுத்து, இஸ்ரேல் உடனான சண்டையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்தது. முதலில் போர் நிறுத்தம் இல்லை என்று கூறிய ஈரான் தற்போது போர் நிறுத்தத்தை அறிவித்தது.
இந்நிலையில், அணு ஆயுதத்தை தயாரிக்க ஈரான் மீண்டும் முயற்சிக்க கூடாது அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜே.டி. வான்ஸ், "ஈரானின் அணு நிலையங்கள் மீதான எங்களது தாக்குதல், யுரேனியத்தை புதைப்பதை இலக்காக கொண்டு இருந்தது. யுரேனியம் புதைக்கப்பட்டுவிட்டது என்று நான் நினைக்கிறேன். ஈரானின் யுரேனியம் கையிருப்பை அகற்றவும், செறிவூட்டப்பட்ட எரி பொருளை அணு ஆயுதமாக மாற்றும் ஈரானின் திறனை அழிக்கவும் அமெரிக்கா விரும்பியது.
அதன்படி அமெரிக்கா தாக்கிய 3 செறிவூட்டல் நிலையங்களுக்கு அடியில் ஈரானின் யுரேனியம் கையிருப்பு புதைந்து போயிருக்கலாம். நாங்கள் ஈரானுடன் போரில் ஈடுபடவில்லை. ஈரானின் அணுசக்தி திட்டத்துடன் போரில் ஈடுபட்டுள்ளோம்.
அமெரிக்காவின் தாக்குதல்கள் ஈரானின் அணு ஆயுதத்தை உருவாக்கும் முயற்சிகளை கணிசமாக தாமதப்படுத்தியுள்ளன. அதுதான் தாக்குதலின் குறிக்கோளாக இருந்தது. அதை நிறைவேற்றி உள்ளோம். ஈரான் எதிர்காலத்தில் அணு ஆயுதத்தை உருவாக்க விரும்பினால் அவர்கள் மீண்டும் மிகவும் சக்திவாய்ந்த அமெரிக்க ராணுவத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்று தெரிவித்தார்.





















