இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடர்கிறது - போர் நிறுத்தம் குறித்த டிரம்பின் அறிவிப்பை மறுத்த ஈரான்
கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று இரவு ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்கியுள்ளது.
அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இருப்பினும் ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக கத்தாரும், அமெரிக்காவும் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது.
அமெரிக்காவின் தலையீடு நிலைமையை மேலும் மோசமாக்கியது. இந்நிலையில் ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், போர்நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் அறிவிப்பை ஈரான் மறுத்துள்ளது.
இது தொடர்பாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி தனது எக்ஸ் பதிவில், "இஸ்ரேல் தான் ஈரான் மீது போரை தொடங்கியது. நாங்கள் போரை தொடங்கவில்லை.
தற்போது வரை, போர் நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த 'உடன்பாடும்' எட்டப்படவில்லை.
இருப்பினும், இஸ்ரேலிய ஆட்சி ஈரானிய மக்களுக்கு எதிரான சட்டவிரோத ஆக்கிரமிப்பை தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் நிறுத்தினால், அதன் பிறகு எங்கள் பதிலடியைத் தொடர எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை.
எங்கள் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.





















