இஸ்ரேல் உடனான மோதலில் அமெரிக்கா ஈடுபட்டால், அது எல்லோருக்கும் ஆபத்து - ஈரான் அமைச்சர் எச்சரிக்கை..!
இஸ்ரேல்- ஈரான் இடையில் 8 நாட்களுக்கு மேலாக மோதல் நடைபெற்று வருகிறது. ஈரான் ஹைப்பர்சோனிக், கொத்து குண்டுகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அதேவேளையில் ஈரானில் உள்ள அணுஉலை மற்றும் அணு ஆராய்ச்சி நிலையம் மீது இஸ்ரேல் பயங்கரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் அமெரிக்கா மோதலில் தலையீடு செய்தால், சரி செய்ய முடியாத அளவிற்கு விளைவுகளை சந்திக்கும் என ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இஸ்ரேலுக்கு எதிரான சண்டையில், அமெரிக்கா தலையீடு செய்தால் அது எல்லோருக்கும் ஆபத்தானதாக இருக்கும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அப்பாஸ் அராக்சி கூறுகையில் "இஸ்ரேல் உடனான சண்டையில் அமெரிக்கா தலையீடு செய்தால் அது எல்லோருக்கும் ஆபத்தானதாக இருக்கும். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க ராணுவம் தலையீடு குறித்து மதிப்பீடு செய்து வருவது, மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
அணுஆயுதம் திட்டம் குறித்த மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக இருக்கிறது. இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் ஆர்வம் காட்டவில்லை" என்றார்.























