நல்லூர் பிரதேச சபையினர் காரைக்காலில் கழிவுகளை கொட்டி தரம் பிரிக்க தடை
இலங்கை
நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையத்தின் செயற்பாட்டை உடன் நிறுத்தி அங்குள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு யாழ் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
காரைக்கால் சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள நிலையத்தில் மருத்துவ, இலத்திரனியல், இரசாயன, பொலித்தீன், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை தரம் பிரிக்காமல் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இதனால் அப்பகுதி மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அண்மைக்காலமாக இனம் தெரியாத நபர்கள் குறித்த கழிவுகளுக்கு இரவு வேளைகளில் தீ வைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறான நிலையில் இதனை ஒரு பொதுத் தொல்லையாகவும் சூழல் மாசடையக் கூடிய வகையில் காணப்படுகின்றமை தொடர்பிலும் யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் குறித்த வழக்கின் மீதான விசாரணைகளை அடுத்து
அப்பகுதியில் கழிவுகளை சேகரிக்கும் நடவடிக்கையை உடன் நிறுத்துமாறும் அங்குள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.






















