இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,000 பேர் உயிரிழப்பு
இலங்கை
2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் வாகன விபத்துகளால் சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது ” நாட்டில் இடம்பெறும் பெரும்பாலான வீதி விபத்துகள், தகுதியற்ற வாகனங்கள் மற்றும் ஒழுங்கற்ற சாரதிகளினாலேயே ஏற்படுவதாகத் தெரிவித்த அவர் ” 2025 ஜனவரி 1 முதல் ஜூன் 15 வரையான 6 மாதங்களில், உயிரிழப்புகளை ஏற்படுத்திய 1,133 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன எனவும், இதில் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், இது மிகவும் பேரழிவு தரும் சூழ்நிலையாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ” எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் வாகனங்களில் பொருத்தப்பட்ட தேவையற்ற உதிரி பாகங்கள் கட்டாயமாக அகற்றப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.






















