அஜித் அண்ணா தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்..!- நடிகர் மஹத்
சினிமா
'மங்காத்தா', 'பேக்பென்ச் ஸ்டூடண்ட்', 'டபுள் XL' போன்ற படங்களில் தனது தனித்துவமான கதாபாத்திரங்களால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் மஹத் ராகவேந்திரா.
தனது பிசிக்கல் டிரான்ஸ்ஃபர்மேஷனுக்காக தற்போது பாக்ஸிங் கற்றுள்ளார். கடந்த ஒரு வருடமாக இந்தியாவில் பாக்ஸிங்கில் நடிகர் மஹத் கடுமையான பயிற்சி பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் ஆஸ்திரேலியாவில் பாக்ஸிங் பயிற்சி பெற்றார்.
இந்த வருடம் ஆஸ்திரேலிய சூப்பர் வெல்டர்வெயிட் குத்துச்சண்டை சாம்பியனான கோயன் மசூடியரிடம் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்ததுதான் நடிகர் மஹத் குத்துச்சண்டை பயணத்தின் சிறப்பம்சம்.
இந்த அனுபவத்தை பகிர்ந்த நடிகர் மஹத் "சக்தி, வேகம், கவனம், சமநிலை மற்றும் திறமை ஆகியவற்றின் நம்பமுடியாத பயணம். இதில் பல சவால்கள் இருந்தாலும் அதை சமாளித்து பயிற்சி பெற்றேன். இது ஃபிட்னஸ் தொடர்புடையது மட்டுமல்ல, ஒரு போராளியின் மனநிலையையும் எனக்குள் உருவாக்கியது" என்றார்.
மேலும், "நடிகர்கள் தங்களுக்கான ஸ்டிரீயோ டைப்பை உடைக்க வேண்டும் என்பதை கார் ரேஸ் சாதனைகள் மூலம் எனக்கு அஜித் அண்ணாதான் புரிய வைத்தார். நான் விரும்பும் போட்டி விளையாட்டுகளில் பங்கேற்கவும், என் திறமையை நிரூபிக்கவும் இனிவரும் காலங்களில் விரும்புகிறேன். அடுத்தடுத்து எனது படங்களிலும் திறமையை மேம்படுத்தவும் இது உதவும்" என்றார்.






















