தடை இல்லை என்றாலும் தக் லைஃப் படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாது - விநியோகஸ்தர் தரப்பில் தகவல்
சினிமா
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படம், கர்நாடகாவை தவிர்த்து உலகம் முழுவதும் வெளியானது.கன்னட மொழி தமிழில் இருந்துதான் பிறந்தது என்று கமல் பேசியது தீயாக பரவி கர்நாடகாவில் போராட்டம் வெடித்தது . இதனால் படத்தை கர்நாடகாவில் தடை செய்து வெளியிடவில்லை.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் தற்பொழுது கர்நாடகாவில் படத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று தீரிப்பளித்துள்ளது.
இந்த விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது உயர்நீதிமன்றத்தில் வேலை அல்ல. கமல்ஹாசன் பேச்சுக்காக அவரை மிரட்டுவதை அனுமதிக்க முடியாது. உயர்நீதிமன்றம் எப்படி அப்படி கூறலாம்? என்று கர்நாடகா உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் காட்டமான கேள்வி எழுப்பியது.
மேலும் தக் லைஃப் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, கர்நாடகாவில் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடும்போது திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், தடை இல்லை என்றாலும் தக் லைஃப் படம் கர்நாடாகாவில் வெளியிட வாய்ப்பில்லை என்று விநியோகஸ்தர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய விநியோகஸ்தர் ஒருவர், "நாளை 3 தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளதால் தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட போதிய திரையரங்குகள் இல்லை. இன்னும் 2 வாரங்களில் ஓடிடியில் தக் லைஃப் வெளியாகிவிடும் என்பதால் கர்நாடகாவில் இப்படத்தை தற்போதைக்கு திரையிட முடியாது" என்று தெரிவித்தார்.























