போர் நிறுத்தம் வேலைக்கு ஆகாது.. இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு நீடித்த தீர்வைக் காண்பேன் - டிரம்ப்
இஸ்ரேல் - ஈரான் மோதலுக்குத் தீர்வாக போர் நிறுத்தத்தை முன்மொழியவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏர் ஃபோர்ஸ் ஒன் விமான பயணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீடித்த தீர்வு மூலம் மோதலை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வருவதே தனது முயற்சி" என்று கூறினார்.
ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழிக்க அமெரிக்கா இராணுவத்தை அனுப்புமா என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், "அதற்கு முன்னரே ஈரானின் அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்படும்; அவர்கள் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெற மாட்டார்கள்" என்று எச்சரித்தார்.
தெஹ்ரானில் இருந்து மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டது, மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவே அன்றி வேறு எந்த நோக்கமும் இல்லை என்றும் டிரம்ப் தெளிவுபடுத்தினார்.
முன்னதாக, இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாட்டின் தலைமையகத்தை ஈரான் தாக்கியது.
மேலும், ஈரான் நான்காவது இஸ்ரேலிய F-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரானிய செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது. இந்த விமானம் தப்ரிஸில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் ஈரான் கூறியுள்ளது.























