நைஜீரியா - கிராமத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 100 பேர் உயிரிழப்பு
மத்திய நைஜீரியாவின் பென்யூ மாநிலத்தில் உள்ள யெலேவாடா கிராமத்தில் நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிசூடு தாக்குதலில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை காலை வரை நீடித்த இந்த தாக்குதலில் பலரைக் காணவில்லை, மேலும் டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் நைஜீரியா அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் விவசாயிகளை குறிவைத்ததாகத் தெரிகிறது. இதனால் விவசாய சமூகங்கள் இடம்பெயர்ந்து அப்பகுதியின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படலாம்.
பென்யூ மாநிலத்தில் 2019 ஆம் ஆண்டு முதல் மேய்ச்சல்காரர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையிலான மோதல்களால் 500 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் சுமார் 2.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவை பெரும்பாலும் இன மற்றும் மத வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்ட மோதல்களாகும்.
கடந்த மாதம், பென்யூவில் 42 பேர் மேய்ச்சல்காரர்களால் கொல்லப்பட்டனர். இந்த மோதல்களால் நைஜீரியாவில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.






















