ஒரே இருக்கை.. ஒரே விதி! 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடந்த அதிசயம் - மிரள வைக்கும் 11A மாயம்
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா AI 171 விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணி விஸ்வாஷ் குமார் ரமேஷ் (40), விமானத்தில் 11A இருக்கையில் அமர்ந்திருந்தது தெரியவந்தது.
அவசரகால வெளியேறும் வழிக்கு அருகில் அமர்ந்திருந்த அவர், விபத்தின்போது விமானத்திலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்டு, காயங்களுடன் தப்பித்துள்ளார். "நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை, இது ஒரு அற்புதம்" என்று ரமேஷ் கூறினார்.
இந்தச் சம்பவம் உலக அளவில் வியப்பையும், 11A இருக்கை மீது ஒரு ராசி இருப்பதாகவும் நம்பவைத்தது.
தாய்லாந்து நடிகர்-பாடகர் ரூங்சக் லோய்சுசக் (47), 27 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1998 டிசம்பர் 11 அன்று, தாய் ஏர்வேஸ் விமானம் TG261 விபத்துக்குள்ளானபோது, அவரும் 11A இருக்கையில் அமர்ந்து உயிர் பிழைத்தவர். அந்த விபத்தில் 146 பேரில் 101 பேர் உயிரிழந்தனர்.
அகமதாபாத் விபத்தில் 11A இருக்கையில் ஒருவர் உயிர் பிழைத்ததை அறிந்த ரூங்சக், "எனக்கு மயிர்க்கூச்செறிகிறது. இந்திய விமான விபத்தில் தப்பியவர் நான் அமர்ந்த அதே 11A இருக்கையில் அமர்ந்திருந்தார் " என்று பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
தனது வாழ்வை இரண்டாவது பிறப்பு என்று வர்ணிக்கும் ரூங்சக், ஏர் இந்தியா விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.






















