யாழுக்கு 891.30 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு
இலங்கை
யாழ் மாவட்டத்தில் வீட்டுத் திட்டங்களுக்காக 891.30 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கவுள்ளதாகவும், அதில் முதற்கட்டமாக 235 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்ற வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், வீடமைப்புத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை க் கூட்டத்தில் 6 லட்சம் ரூபா பெறுமதியான வீட்டிற்கான நிதி 9 இலட்சம் ரூபாவாகவும், 10 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டிற்கான நிதி 15 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மாவட்ட செயலர், தற்போது 9லட்சம் பெறுமதியான 53 வீடுகளுக்கும், 15லட்சம் பெறுமதியான 563 வீடுகளுக்குமான நிதியுமாக மொத்தமாக மாவட்டத்திற்கு 891.30 மில்லியன் ரூபா நிதி கிடைக்கவுள்ளதாகவும், அதில் முதற்கட்டமாக 235 மில்லியன் நிதி ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து வீட்டுத் திட்ட வேலைகளை துரிதப்படுத்துமாறும் பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு., சுரேந்திரநாதன், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக பிரதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.





















