மெட்ராஸ் மேட்னி படத்திற்கு கிடைத்த வெற்றி தமிழ் திரையுலகிற்கு கிடைத்த வெற்றி - சத்யராஜ் நெகிழ்ச்சி
சினிமா
அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி. இப்படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஒரு மிடில் கிளாஸ் மனிதனின் வாழ்க்கையில் சந்தோஷம் மற்றும் சுவாரசியம் எங்கே இருக்கிறது என்ற கேள்வியுடன் நம் அனைவரின் கதையை பிரதிபலிக்கும் வகையில் ஒரு எதார்த்த கதைக்களத்துடன் இப்படம் உருவாகியுள்ளது.
படத்தை பார்த்த கார்த்திக் சுப்பராஜ் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் நடிகர் காளி வெங்கட் மற்றும் பிரப திரைப்பட விநியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்தில் வெளிவந்த திரைப்படத்தில் மெட்ராஸ் மேட்னி திரைப்படம் தான் ஹிட் என கூறினார்.
தற்பொழுது படத்தில் நடித்த சத்யராஜ் படத்தை வெற்றிப்பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் "இப்படத்தை வெற்றி பெற வைத்த தமிழ் மக்களுக்கு மிக்க நன்றி. இந்த மாதிரி திரைப்படம் ஓடினால். கார்த்திகேயன் மாதிரி வித்தியாசமான கதைக்களம் வைத்துள்ள இயக்குநர்களுக்கு ஒரு உத்வேகம் கிடைக்கும். மெட்ராஸ் மேட்னிக்காக கிடைத்த வெற்றி மட்டும் அல்ல தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்த வெற்றியாகும்" என கூறியுள்ளார்.
இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தின் ஒளிப்பதிவை ஆனந்த் ஜி.கே, இசை கே.சி பாலசரங்கன், படத்தொகுப்பு சதீஷ் குமார், கலை வடிவத்தை ஜாக்கி மேற்கொண்டுள்ளனர்.
























