தொடரும் கலவரம் - லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரவுநேர ஊரடங்கு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் குடியேற்றம் தொடர்பான கடும் நடவடிக்கைகளுக்கு எதிராக கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போலீஸ் வாகனங்கள் உள்பட பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. வணிக வளாகங்கள், கடைகள் சூறையாடப்பட்டன.
கலவரத்தை ஒடுக்க தேசிய காவல் படையினர் மற்றும் கடற்படை வீரர்களை அதிபர் டிரம்ப் களமிறக்கியுள்ளார். ஆனாலும், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.
பல இடங்களில் தேசிய படையினர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் லாஸ் ஏஞ்சல்சில் 5-வது நாளாக நீடிக்கும் போராட்டங்களால் பதற்றம் நிலவி வருகிறது.
போராட்டங்களுக்கு மத்தியில் கடைகளுக்குள் புகுந்து பொருட்களைத் திருடிச்செல்லும் சம்பவங்கள் நடந்து வருகிறது. முகமுடி அணிந்த சிலர் ஆப்பிள் ஸ்டோர் மற்றும் வணிக வளாகங்களுக்குள் புகுந்து விலை உயர்ந்த ஆப்பிள் போன்கள், லேப்டாப் ஆகியவற்றை தூக்கிக் கொண்டு ஓடினர். அதேபோல மற்ற கடைகளையும் சேதப்படுத்தி பொருட்களைத் திருடிச்சென்றனர்.
இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரவுநேர ஊரடங்கு உத்தரவை மேயர் கரேன் பாஸ் பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், நாசவேலையைத் தடுக்கவும், கொள்ளை அடிக்கப்படுவதைத் தடுக்கவும், உள்ளூர் அவசர நிலையை அறிவித்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்தில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளேன். போராட்டங்கள் நடந்த பகுதியை உள்ளடக்கிய நகர மையபகுதியில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவித்தார்.






















