வங்கதேசத்தில் ரவீந்திரநாத் தாகூரின் இல்லத்தை சூறையாடிய கும்பல்
நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லமான, வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கச்சாரிபரி அருங்காட்சியகம் சூறையாடப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், அருங்காட்சியகத்தை தற்காலிகமாக மூடியுள்ளனர்.
ஒரு பார்வையாளர் தனது குடும்பத்துடன் அருங்காட்சியகத்திற்கு வந்தபோது, வாகன நிறுத்துமிடக் கட்டணம் தொடர்பாக ஊழியர்களுடன் தகராறு ஏற்பட்டது. இது முற்றிய நிலையில், பார்வையாளர் ஒரு அலுவலக அறையில் பூட்டப்பட்டு ஊழியர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் உள்ளூர் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, நேற்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர்வாசிகள் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர். பின்னர் ஒரு கும்பல் அருங்காட்சியக வளாகத்திற்குள் புகுந்து அதன் அரங்கத்தை சூறையாடியதுடன், இயக்குநரையும் தாக்கியது.
இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த, தொல்லியல் துறை மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
தாகூர் தனது பல இலக்கியப் படைப்புகளை இங்குதான் உருவாக்கினார். இந்த மாளிகை இப்போது அவரின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கலாச்சார பாரம்பரிய தளமாகவும், அருங்காட்சியகமாகவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.























