ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாரெட் லெட்டோ மீது 9 பெண்கள் பாலியல் புகார்
சினிமா
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாரெட் லெட்டோ(வயது53). இவர் 1995-ம் ஆண்டு ஹவ் டு மேக் அன் அமெரிக்கன் குயில்ட் என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
இதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். டல்லர்ஸ் பையர்ஸ் கிளப், மைசோ கால்ட் லைப், ரெக்விம் பார் எட்ரீம் போன்ற படங்கள் இவரது நடிப்பில் மிக முக்கியமான படங்களாகும்.
டல்லர்ஸ் பையர்ஸ் கிளப் படத்தில் திருநங்கை பெண்ணாக நடித்ததற்காக இவர் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது மற்றும் கோல்டன் குளோப் விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் ஜாரெட் லெட்டோ, பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தங்கள் முன்பு நிர்வாணமாக நின்றதாகவும், பாலியல் ரீதியாக தொடர்ந்து பேசி வந்ததாகவும் 9 பெண்கள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை அவர் மீது தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர் மீது புகார் தெரிவித்துள்ள மாடல் அழகி ஒருவர் கூறும்போது, கடந்த 2008-ம் ஆண்டு, நடிகர் ஜாரெட் லெட்டோவை நான் விலங்கு உரிமை நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தேன். அப்போது எனக்கு 16 வயது. பின்னர் அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னை அவரது ஸ்டுடியோவுக்கு அழைத்தார். நான் அங்கு சென்ற போது அவர், என்னை நிர்வாணமாக நிற்க சொல்லியதுடன், அவரும் நிர்வாணமாக நின்று என்னிடம் பாலியல் தொல்லைகளில் ஈடுபட்டார் என தெரிவித்தார்.
இதேபோல் மற்றொரு பெண் எனக்கு 16 வயது இருக்கும் போது லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து நடிகர் ஜாரெட் லெட்டோவுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் தினமும் இரவில் போன் செய்து என்னிடம் பேசி வந்தார். நாட்கள் செல்ல செல்ல அவர் என்னிடம் பாலியல் ரீதியாக பேசி தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்தார்.
மற்றொரு பெண், தான் சிறுவயதில் இருக்கும் போது நடிகர் ஜாரெட் லெட்டோ என்னிடம் பேசக்கூடாத வார்த்தைகளை பேசினார். மேலும் எனக்கு 18 வயது இருக்கும் போது, நடிகர் ஜாரெட் லெட்டோ என் முன்பு நிர்வாணமாக நின்றதுடன், என்னையும் அப்படி செய்யுமாறு வற்புறுத்தியதாக அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் இன்ஸ்டாகிராமில் நடிகர் ஜாரெட் லெட்டோ 17 வயதில் தகாத முறையில் நடந்து கொண்டதாக டி.ஜே ஒருவர் இன்ஸ்டாகிராம் பதிவை பதிவிட்டிருந்தார். அந்த பதிவுக்கு பிறகே பிற பெண்களும், நடிகர் ஜாரெட் லெட்டோவால் தங்களுக்கு நேர்ந்தவற்றை அதில் பதிவிட்டிருந்தனர். அதன் காரணமாகவே தற்போது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் ஜாரெட் லெட்டோ மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அவரது தரப்பினர் மறுத்துள்ளனர்.
நடிகர் ஜாரெட் லெட்டோ கடந்த 33 ஆண்டுகளாக பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். அத்துடன் சில அறக்கட்டளைகள் மூலமாக மருத்துவ உதவிகளை குழந்தைகளுக்கு வழங்கி வருகிறார். அப்படிப்பட்டவர் மீது தெரிவித்துள்ள புகார்கள் அனைத்தும் பொய்யானவை. இதுமாதிரி எதுவும் நடக்கவில்லை. அனைத்தும் ஆதாரமற்றவை என நடிகர் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
பிரபல ஹாலிவுட் நடிகர் மீது 9 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறிய சம்பவம் ஹாலிவுட் திரையுலகினரிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.























