• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்கா-சீனா இடையே 9-ந்தேதி வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை - அதிபர் டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடையே நடைபெறும் வர்த்தக போர் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்க பொருட்களுக்கு சீனா அதிக வரி விதித்து வருகிறது என அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து அவர் அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்க தொடங்கினார். இதற்கு பதிலடியாக சீனாவும் வரி விதித்தது. இதனால் அமெரிக்கா-சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் தொடங்கியது.

அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போர் உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எரிபொருள், உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளை வளர்ந்து வரும் நாடுகள் உள்பட பல்வேறு நாடுகள் எதிர்கொண்டுள்ளன.

இதற்கிடையே ஒரு கட்டத்தில் சீன பொருட்களுக்கு அமெரிக்கா 145 சதவீதம் வரி விதித்தது. இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய வரி விதிப்பை இரு நாடுகளும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தன.

மேலும் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்னர் வர்த்தக ஒப்பந்தத்தை சீனா மீறிவிட்டது என அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையே இரு நாடுகளின் தலைவர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்தனர். இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் நேற்று முன்தினம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்கள்.

இதுபற்றி குறிப்பிட்ட டிரம்ப், உரையாடல் மிக நேர்மறையாக நடந்து முடிந்தது என்றார்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது மந்திரிசபையின் பிரதிநிதிகள் வருகிற 9-ந்தேதி லண்டனில் சீன மந்திரிசபை பிரதிநிதிகளை சந்தித்து வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிப்பார்கள் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் ஆகியோர் வருகிற 9-ந்தேதி லண்டனில் சீன பிரதிநிதிகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கூட்டம் மிக சிறப்பாக நடக்க வேண்டும்.

இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

Leave a Reply