அசாத் மௌலானா தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த முடியாது! பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு
இலங்கை
”அஸாத் மௌலானா” தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று (05) நடைபெற்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாகவே பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சு இவ்வாறு பதிலளித்துள்ளது.
இதன்போது ”உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சர்ச்சைக்குறிய கருத்துக்களை வெளியிட்டிருந்த அஸாத் மௌலானா என்பவரை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதன் காரணமாகமே அது தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த முடியாது” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அஸாத் மௌலான என்ற நபர் சனல் -04 அலைவரிசைக்கு 2023.09.09 ஆம் திகதியன்று அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தார்.
குறித்த அறிக்கையானது நாடளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இவ்விடம் விடயம் தொடர்பில் சமூக மற்றும் சமாதான மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அருட்தந்தை ரொஹான் சில்வா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் அளித்த முறைப்பாடு தொடர்பில் கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு,விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த நடவடிக்கைக்கு தடை ஏற்படும் என்ற காரணத்தினாலேயே அது தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






















