• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தென் கொரியா புதிய அதிபர் தேர்வு.. வட கொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

தென் கொரியாவில் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், கடந்த ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி திடீரென்று அவசர ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தார்.

இதற்கு எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அச்சட்டத்தை திரும்ப பெற்றார். இதையடுத்து பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பின் தற்காலிக அதிபராக ஹான் டக்-சூ நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே தென் கொரியாவில் ஜூன் 3-ந் தேதி அங்கு அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இதில் எதிர்க்கட்சியான லிபரல் கட்சி வேட்பாளர் லீ ஜே மியூங்க் 49.20 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார். இதன்மூலம் அவர் தென் கொரியாவின் புதிய அதிபர் ஆகிறார்.

அவருக்கு அடுத்தபடியாக மக்கள் கட்சி தலைவர் கிம் மூன் சூவுக்கு 41.46 சதவீத வாக்குகள் கிடைத்தன. அவர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.

இதற்கிடையில் புதிய அதிபராக நேற்று பதவியேற்ற லீ ஜே மியூங்க், நீண்ட கால பகையாளி ஆன வட கொரியாவுடன் நல்லுறவை ஏற்படுத்த விழைந்துள்ளார்.

வெற்றிபெற்ற பின்பு பேசிய மியூங்க், "வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் நாட்டை ஒன்றிணைக்க பாடுபடுவேன். மற்றொரு இராணுவ சதி அல்லது இராணுவச் சட்ட நெருக்கடி மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்வேன்" என உறுதியளித்தார்.

61 வயது வழக்கறிஞரான லீ ஜே மியூங்க், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு, சியோங்னாமின் மேயராக எட்டு ஆண்டுகளும், கியோங்கி மாகாணத்தின் ஆளுநராக மூன்று ஆண்டுகளும் பணியாற்றினார்.

2022 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில், யூன் சுக்-இயோலிடம் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இருப்பினும், தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்ந்து செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார்.

2024 ஆம் ஆண்டு, லீ ஜே-மியுங் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டார், ஆனால் உயிர் பிழைத்தார்.

இராணுவச் சட்ட நெருக்கடியின்போது, லீ ஜே-மியுங் உட்படப் பல அரசியல்வாதிகள் தேசிய சட்டமன்றத்திற்குள் நுழைய முற்பட்டனர்.

அப்போது, அவர் தேசிய சட்டமன்றத்தின் சுவர்களில் ஏற முயன்ற காட்சி வைரலானது, மேலும் அதைத் தொடர்ந்து இராணுவச் சட்டம் நீக்கப்பட்டது.
 

Leave a Reply