• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிள்ளையானின் அலுவலகத்தில் இருந்து தோட்டாக்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பு

இலங்கை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின்(பிள்ளையான்)  மட்டக்களப்பு அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று முற்பகல் முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

விசேட அதிரடிப்படையின் உதவியுடன் கொழும்பிலிருந்து சென்ற குற்றத்தடுப்பு புலனாய்வுத்துறையினரினால் நேற்று இரவு வரை சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த விசேட சோதனை நடவடிக்கைகளின் போது ஆவணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்படி, 9 மில்லிமீற்றர் ரக தோட்டாக்கள் 6, கையடக்க தொலைபேசிகள் 3, சாரதி அனுமதிப் பத்திரம், வெளிநாட்டுக் கடவுச்சீட்டு மற்றும் வேறு ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் சில தோட்டாக்கள் உட்பட தொடர்புடைய 12 கோப்புக்கள் மீட்கப்பட்டுள்ளன.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் 2006 டிசம்பர் 15ஆம் திகதி கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் 90 நாட்கள் தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த பின்னணியில், மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply