உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் அதிக வரி விதிப்புக்கு வர்த்தக நீதிமன்றம் தடை
கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வரி உயர்வை டிரம்ப் அறிவித்தார். இதை எதிர்த்த சீனாவுக்கு வரி 145 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. மற்ற நாடுகளுக்கான வரி உயர்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதற்கிடையே சீனா - அமெரிக்கா பேச்சுவார்த்தை நிலைமையை சற்று சுமூகமாகியது.
டிரம்ப் நிர்வாகத்தின் வரிவிதிப்பு கொள்கைக்கு எதிராக அமெரிக்காவின் பல மாகாணங்களில் வழக்கு தொடரப்பட்டன.
அதில் அதிபர் டிரம்பின் அதிக வரிவிதிப்பு கொள்கை சட்டவிரோதமானது, இது அமெரிக்க பொருளாதாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் அடிப்படையில் டிரம்ப் தன்னிச்சையாக வரிகளை விதிக்க முடியும் என்று கூறுவது தவறானது. வரிகளை விதிக்க பாராளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
அவசரநிலை, வெளிநாட்டில் இருந்து அசாதாரண அச்சுறுத்தல் இருக்கும்போது மட்டுமே அதிபர் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தை செயல்படுத்த முடியும். எனவே வரிவிதிப்பு கட்டணங்களை சட்டவிரோதமானது என்று அறிவிக்கவும், அரசு நிறுவனங்கள் மற்றும் அதன் அதிகாரிகள் அவற்றைச் செயல்படுத்துவதைத் தடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த Manhattan வர்த்தக நீதிமன்றம் உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் அதி உயர் வரி விதிப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கின் விசாரணையில், "அமெரிக்க ஜனாதிபதிக்கு "வரம்பற்ற" அதிகாரங்களை வழங்கப்படவில்லை. ஒரு அசாதாரண அச்சுறுத்தல் அல்லது அவசரகாலத்தின் போது தேவையான பொருளாதாரத் தடைகளை விதிக்க மட்டுமே ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. அதிபர் டிரம்ப் தனக்கு இருக்கும் அதிகாரத்தை மீறி செயல்படுவதாக" கூறி நீதிபதிகள் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.























