• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மிகச்சிறந்த நடிகர் மறைந்த ராஜேஷ் நெஞ்சில் நிறைந்த கதாபாத்திரம்! டாக்டர் ஆனந்தன்!

சினிமா

திரைப்படம்:அந்த 7 நாட்கள்!
மறக்கமுடியுமா இந்தத் திரைப்படத்தை.இயக்குநர் பாக்யராஜ் அவர்களின் மாஸ்டர் பீஸ் திரைப்படமாயிற்றே!
ஒரு படத்தின் திரைக்கதை எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இந்தப் படத்தையே உதாரணமாக கூறலாம்.
இந்தப் படத்தில் வரும் டாக்டர் கதாபாத்திரத்தை நம்மால் மறக்கவே முடியாது.தாய்ப்பாசம்,பொறுமை,சகிப்புத்தன்மை,விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என எல்லாக் குணங்களும் ஒருங்கே அமைந்த அற்புதமான கதாபாத்திரம் இது.
நடிகர் ராஜேஷ் அவர்களின் கண்ணியமான தோற்றத்திற்கும் இந்தக் கதாபாத்திரம் மிக பொருத்தமாக அமைந்தது எனலாம்.ஒரு படத்தின் வெற்றிக்கு கதாபாத்திரத்திற்கேற்ற நடிகர்களின் தேர்வே பாதி வெற்றியை கொடுத்து விடும் என உறுதியாக சொல்லலாம்.
தன்னுடைய மனைவி வேறு ஒருவரின் காதலி என அறிந்த பிறகு அந்தக் காதலனை தேடிக் கண்டு பிடித்து காதலியுடன் சேர்க்க போராடும் அற்புதமான கேரக்டர்.
இவரின் பண்பையும் குணத்தையும் காட்சியின் மூலமாக கண்டு நாம் ஆச்சர்யப்படுவது போலவே வசந்தியும் உணர்வாள்.இப்படியாப்பட்ட மனிதனுக்கு நாம் துன்பத்தை தருகிறோமே என உணரவும் செய்கிறாள்.அதை இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் வசந்தி கேரக்டருக்கு நிறைய Close up shot வைத்து அவளின் உணர்வுகளை அழகாக நமக்கு கடத்துவார்.
இந்தப் படத்தில் வரும் ஒரு காட்சியும் மௌன ராகம் படத்தில் ஒரு காட்சியும் ஒரே சாயலில் இருக்கும்.
ஆனந்தனின் மகள் சிறிது நாட்களில் வசந்தியுடன் ஒட்டிக்கொள்வாள்.அந்தப் பழக்கத்தில் வசந்தியுடன் இரவில் படுத்துக்கொள்ளும் பொழுது ஆனந்தன் வலுக்கட்டாயமாக அடித்து தூக்கிச் செல்லும் பொழுது வசந்தி கோபத்தில்,"என் மேலே உள்ள கோபத்தை குழந்தை மேலே காட்டாதீங்க",என சொல்லும் பொழுது ஆனந்தன் சாந்தமாக,"நீ இங்கே இருக்கற கொஞ்ச நாள்ல இவ தாயின் சுகத்தை அனுபவிச்சுட்டா,நீ போனப் பெறகு அவ ஏங்கிப் போவா.தாயின் சுகத்தை மறுபடியும் அவளுக்கு நான் தர முடியாது.அந்தக் கோபம்தான் எனக்கு.ஒன் மேலே எனக்கு எந்தக் கோபமும் இல்லை",என்று சொல்வார்.

இதே போல்தான் மௌனராகம் படத்தில் சந்திரகுமார்(மோகன்)திவ்யா(ரேவதி)வின் பெற்றோர்களை புறக்கணித்து பேசுவார்.திவ்யா இதை உணர்ந்து கேட்க,"நாளைக்கே உனக்கு டைவர்ஸ் கிடைச்சு போனாக் கூட இப்படியாப்பட்ட புருஷன் கூட வாழறதுக்கு தங்களோட வர்றதே நல்லது",ன்னு ஒங்க அப்பா அம்மா நினைக்கத்தான் பேசினேன் என்று சொல்வான்.
க்ளைமாக்ஸைக் காட்டிலும் இந்தப் படத்தில் வரும் ஒரு காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும்.
வசந்திக்கு முன்றாம் நாள் தாலி பிரிக்கும் நிகழ்ச்சி டாக்டர் வீட்டில் நடக்கும்.
மாடியில் தனது மனைவியின் காதலனை கண்டுபிடிப்பதற்காக போன் மூலமாக கேரள நண்பருடன் பேசுவார் டாக்டர் ஆனந்தன்..அந்த டயலாக்கும் ரொம்ப நல்லாயிருக்கும்.
"அவருக்கு சேரவேண்டிய பொருள் ஒண்ணு,என்னோட விலாசத்துக்கு தவறுதலா வந்துச்சு.அதை அவர்கிட்டேயே சேர்க்கணும்",ப்பார்.டாக்டர் பேசுவதை வசந்தியும் கீழே கேட்டுக்கொண்டிருப்பாள்.டாக்டர் கண்ணியமானவன்;நேர்மையாளன் என்பதை வசந்தியும் பார்வையாளனும் உணரும் காட்சிகள் அவை.
இப்படி,இக்கதாபாத்திரத்தை மெச்சிப் பேசும் அளவிற்கு காட்சிகளால் செதுக்கியிருப்பார் இயக்குனர் பாக்யராஜ் அவர்கள்.
டாக்டர் ஆனந்தன் கேரக்டர் படத்தில் மொத்தம் 45 நிமிடமாவது வரும்.க்ளைமாக்ஸ் காட்சி மட்டும் 17 நிமிடங்கள்.
சாகக்கிடக்கும் அம்மா,"என்னோட வற்புறுத்தனாலதான் நீ கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு தெரியும்.வசந்தியை கண்கலங்காம பாத்துக்கப்பா",என சொல்லும் பொழுது,"வசந்திக்கு எது சந்தோஷமோ அதைத்தான்மா நான் செய்வேன்.அதைப் பத்தியெல்லாம் நீங்க கவலைப்படாதீங்கம்மா",என நமக்கும் அம்மாவிற்கும் சேர்த்தே பதில் அளிப்பார்.
இப்படி காட்சிக்கான வசனங்களில் கூட தனது புத்திசாலித்தனத்தை காண்பித்திருப்பார் பாக்யராஜ் அவர்கள்.
நடிகர் சந்திரபாபு அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவம்தான் இப்படத்தின் கதைக்கான தூண்டுதல் எனவும் சொல்கிறார்கள்.
சந்திரபாபுவின் மனைவி முதல் இரவிலேயே தனது கடந்த கால காதல் வாழ்க்கையை சொல்ல,அந்தக் காதலனிடமே தனது மனைவியை அனுப்பி வைத்ததாகவும் படித்திருக்கிறேன்.இந்த துயரமான சம்பவத்திற்கு பின்புதான் அவருடைய வாழ்க்கையும் திசை மாறிப் போயிருக்க வேண்டும்.
இந்தப் படத்தைப் பற்றி பேசணும்னா பேசிக்கிட்டே போகலாம்.
நடிகர் ராஜேஷ் அவர்களின் திறமைக்கேற்றவாறு நிறைய கதாபாத்திரங்கள் கிடைத்திருக்க வேண்டும்.ஆனால்,கிடைக்கல.
இப்படித்தான் பல நடிகர்கள் நம்மை விட்டு மறைந்து இருக்கிறார்கள்.

 

சே மணிசேகரன்
 

Leave a Reply