• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விமானப் பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இலங்கையர் கைது

இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தின் பணிப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

39 வயதான தென்னாப்பிரிக்கப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியதும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

49 வயதான சந்தேக நபர் யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

நேற்று துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குப் பயணித்த விமானத்தில் சந்தேக நபர் அதிக அளவில் மதுபோதையில் இருந்ததாகவும், விமானப் பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விமானப் பணிப்பெண் உடனடியாக விமானிக்குத் தகவல் தெரிவித்தார்.

அதன் பின்னர் சந்தேக நபரான பயணி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

குறித்த பயணி நீர்கொழும்பு தடயவியல் மருத்துவப் பரிசோதகரிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

சந்தேக நபர் இன்று கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
 

Leave a Reply