• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அடுத்த 5 ஆண்டுகளில் உலக வெப்பநிலை புதிய உச்சம் தொடும்- அதிக மழைப்பொழிவு, சூறாவளி ஏற்பட வாய்ப்பு

இந்தியாவில் அக்னி நட்சத்திர வெயில் நேற்று முடிவடைந்தது. இந்த நேரத்தில், உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு, இங்கிலாந்து வானிலை ஆராய்ச்சி நிலையம் ஆகியவை அடுத்த 5 ஆண்டுகளுக்கான வானிலை கணிப்பை வெளியிட்டுள்ளன. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அடுத்த 5 ஆண்டுகளில், வருடாந்திர வெப்பநிலை புதிய உச்சம் தொடுவதற்கு 80 சதவீத வாய்ப்பு இருக்கிறது. மேலும், 10 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட சர்வதேச வெப்பநிலை வரம்பை மீண்டும் மீறும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. நடப்பு பத்தாண்டு காலம் முடிவதற்குள், உலக வெப்பநிலை, மிகவும் ஆபத்தான 2 டிகிரி செல்சியசை எட்டும் வாய்ப்பு உள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் ஏதேனும் ஒரு ஆண்டில் உலக வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியசை தாண்ட 86 சதவீத வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவற்றில் கூறப்பட்டுள்ளது.

கார்னெல் பல்கலைக்கழக பருவநிலை விஞ்ஞானி நடாலி மஹோவால்டு. இந்த கணிப்பில் பங்கேற்கவில்லை. இருப்பினும் அவர் கூறுகையில், மிதமிஞ்சிய வானிலைக்கான காரணமாக வலுவான சூறாவளிகள், வலுவான மழைப்பொழிவு, வறட்சி ஆகியவை ஏற்படும். இதன் காரணமாக உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.

இங்கிலாந்து வானிலை ஆராய்ச்சி மையத்தின் பருவநிலை மாற்ற ஆராய்ச்சி பிரிவின் தலைவர் ரிச்சர்டு பெட்ஸ் கூறுகையில், ஆர்க்டிக் பகுதியில் உள்ள பனிப்பிரதேசம், மற்ற பகுதிகளை விட 3.5 மடங்கு வேகமாக வெப்பமடைந்து உருகும். அதனால் கடல் நீர்மட்டம் உயரும். உலகளாவிய வெப்பநிலை, ஒரு நகரும் படிக்கட்டில் மேலே ஏறுவது போல் உயருகிறது என்றார்.

Leave a Reply