• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையில் தேசிய அடையாள அட்டை,பாஸ்போட் ஆகியவற்றை ஒரே நாளில் எடுக்க முடியுமா ?

இலங்கை

இலங்கையில் தேசிய அடையாள அட்டை,பாஸ்போட் ஆகியவற்றை ஒரே நாளில் எடுக்க முடியுமா ?
ஆம்.முடியும்.
அதற்குரிய நடைமுறைகள் என்ன ?
01. தேசிய அடையாள அட்டை- ஒரே நாள் சேவை.
நீங்கள் உள்நாட்டில் வசிக்கலாம். அல்லது வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைப் பிரசையாக இருக்கலாம்.
உங்களது பிரிவுக் கிராம அலுவலரிடம் செல்லுங்கள். செல்வதற்கு முன்பாக தேசிய அடையாள அட்டைக்கு அங்கீகரிக்கப்பட்ட படப்பிடிப்பு ஸ்ரூடியோ ஒன்றுக்குச் செல்லுங்கள்.
பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கலாம். ஆனால் ஆண்களோ பெண்களோ திருநீறு சந்தனம் வைத்துப் படம் எடுக்கக் கூடாது.
ஸ்ரூடியோவில் படம் எடுத்தால் அதனைப் பதிவு செய்து ஒன்லைன் பிறின்ற் தருவார்கள்.
உங்களது பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதியை ஏதாவது ஒரு பிரதேச செயலகத்தில் எடுங்கள். ஏற்கனவே கைவசம் இருக்குமாயின் அது கிழியாத பேப்பருள்ள பிரதி ஆயின் அது போதுமானது. ஆறு மாதத்துக்கு உட்பட்ட பிரதி எனத் தேவையில்லை.
ஆங்கில மொழி பெயர்ப்பும் தேவையில்லை.
அதே போலத் தான் பெண்களும் தமது கணவரின் பெயர் மாற்றித் தேசிய அடையாள அட்டை எடுக்க வேண்டுமாயின் மேலே பிறப்புச் சான்றிதழ் தொடர்பான நடைமுறையே திருமணப் பதிவுச் சான்றிதழுக்குமானது.
இந்த ஆவணங்களின் போட்டோ பிரதியுடன் உங்களது பிரிவு கிராம அலுவலரிடம் செல்லுங்கள்.
திங்கட்கிழமை ஆயின் கிராம அலுவலர் பிரதேச செயலகத்தில் முழு வேலை நேரமும் இருப்பார். அங்கு சென்று அவருடன் கதைத்து ஆவணங்களைக் கொடுத்தால் தேசிய அடையாள அட்டைக்குரிய படிவங்களை நிரப்புவார்.
தொலைந்து போன தேசிய அடையாள அட்டை ஆயின் பொலிஸ் அறிக்கை கட்டாயமானது.
பொலிஸ் நிலையம் சென்றால் 50 ரூபா கட்டணம் வாங்கிக் கொண்டு அதற்கென உள்ள படிவத்தில் எழுதி உடனேயே தருவார்கள். ஒரு அரைமணி நேரம் போதுமானது.
கிராம அலுவலர் உங்களது தேசிய அடையாள அட்டைப் படிவம் யாவற்றையும் நிரப்பித் தருவார். உடனே பிரதேச செயலகத்திலுள்ள தேசிய அடையாள அட்டைப் பிரிவு உத்தியோகத்தர்களிடம் செல்ல வேண்டும்.
அவர்கள். படிவங்களை ஆவணங்களை வாங்கி உரிய பிரதேச செயலரின் கடிதத்தை இணைத்து என்வெலப்பில் இட்டு சீல் செய்து தருவார்கள். தந்தால் அதற்கடுத்த நாள்களில் கொழும்பு பத்திரமுல்லவுக்குச் சென்று ஆட்பதிவுத் திணைக்களத்தில் விண்ணப்பப் படிவத்தைக் கொடுக்க வேண்டும்.
அதிகாலை 05 அல்லது 06 மணிக்குச் செல்லுதல் நன்று.
திங்கள்இவெள்ளி நாள்களைத் தவிர்த்தல் நன்று.ஏனென்றால் திங்கள், வெள்ளி நாள்களில் இலங்கையர்கள் அதிகம் பேர் அரச அலுவலகங்களுக்குச் செல்வதால் நெருக்கடி நிலவும்.
தேசிய அடையாள அட்டையும் ,பாஸ்போட்டும் எடுப்பதாயின் நீங்கள் இரண்டு முழு நாள்களைச் செலவிட வேண்டும். அரசாங்க பொது விடுமுறை நாள் பார்த்துப் போக வேண்டும்.
தேசிய அடையாள அட்டை புதிதாக எடுப்பதாயின் 200 விண்ணப்பப் படிவக் கட்டணம். புதுப்பிக்க 500 ரூபா. தொலைந்த அடையாள அட்டை பெற 1000 ரூபா கட்டணம்.

ஒரே நாள் சேவைக்குரிய கட்டணம் 2000 ரூபா.
நீங்கள் ஆட்பதிவுத் திணைக்களம் சென்று அடையாள அட்டைக்கு வரிசையில் நிற்கும் போது தரகர்கள் வந்து 5000 ரூபா முதல் 10 ,15 ஆயிரம் வரை தந்தால் உடனே ஒரு மணி நேரத்தில் எடுத்துத் தருவோம் என்பார்கள் ஏமாறாதீர்கள்.
02. பாஸ்போட் - கடவுச் சீட்டுப் பெற.
ஒரே நாள் சேவைக்கு கட்டணம் 20 000/-
சாதாரண சேவைக்கு கட்டணம் 10 000/-
சாதாரண சேவையில் பாஸ்போட் கிடைக்க சராசரியாக மூன்று மாதங்கள் செல்கிறது.
2024.11.06 ஆம் திகதி முதல் கடவுச்சீட்டு விண்ணப்பதாரிகளின் வசதி கருதி கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு புதிய முறையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
1. அதற்கமைய, 2024.11.06ஆம் திகதி முதல் இலங்கை கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு http://www.immigration.gov.lk இணைப்பினூடாக முன்கூட்டிய பதிவொன்றை மேற்கொள்ளல் வேண்டும். அன்றைய நாள் முதல் பதிவுசெய்யும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 2024.12.04 ஆம் திகதி புதன் கிழமை முதல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது..
2. எனவே, 2024.12.03ஆம் திகதி செய்வாய் கிழமை வரை இதுவரையில் காணப்பட்ட முறைக்கு அமைய நாட்களைப் பெற்றுக்கொண்டுள்ள ஒழுங்குமுறைக்கு அமைய கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது..
3. புதிய கடவுச்சீட்டு விண்ணப்பதாரிகள்/ தற்போது கடவுச்சீட்டுக்களைவைத்திருப்பவர்கள்/ காணாமல்போன கடவுச்சீட்டுக்கள் என்பவற்றுக்கு இந்தப் புதிய முறையின் ஊடாக பதிவுசெய்ய முடியும்.
4. முன்கூட்டிய பதிவுமுறை ஒருநாள் மற்றும் சாதாரண சேவை என்ற இரண்டு வகைக்கும் செல்லுபடியாகும்.
5. பதிவுசெய்வதற்காக விண்ணப்பதாரியின் செல்லுபடியான தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் செல்லுபடியான தொலைபேசி இலக்கம் என்பன அவசியமாகும். கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது அந்த தேசிய அடையாள அட்டை இலக்கம் விண்ணப்பதாரியின் வசம் இருத்தல் வேண்டும்.
6. 16 வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கு கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்கு பதிவுசெய்யும் போது தாயின் அல்லது தந்தையின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிடுதல் வேண்டும்.
7. மேலுள்ள தகவல்கபை பூரணப்படுத்தும் தாங்கள் ஏற்புடை அங்கீகரிக்கப்பட்ட புகைப்படசாலை ஒன்றிலிருந்து பெற்றுக்கொண்ட புகைப்பட ரசீதுடன் www.immigration.gov.lk இணையத்தளத்தில் பிரவேசித்து "கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு பதிவுசெய்தல்” எனும் ஐகன் ஊடாக உள்நுழைந்து ஒருநாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் பதிவுசெய்ய முடியும்.
8. தங்களது பதிவு வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்படுமிடத்து விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்காக தங்களுக்கு நாளொன்று SMS குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்படும். ஏற்புடைய SMSகுறுஞ்செய்திக்கு அமைய தாங்கள் தெரிவுசெய்த இடத்திற்கு (பிரதான அலுவலகம், மாத்தறை, கண்டி, குருணாகல் மற்றும் வவுனியா) ஒதுக்கப்பட்டுள்ள நாளில் விண்ணப்பம் மற்றும் ஏற்புடைய அனைத்து ஆவணங்களின் மூலப் பிரதிகள் சகிதம் மு.ப. 12.00 மணிக்கு முன்னர் கட்டாயம் சமூகமளித்தல் வேண்டும். அன்றைய தினம் சமூகமளிக்கத் தவறும் பட்சத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சந்தர்ப்பம் இழக்கப்படுவதோடு, வேறு நாளொன்றுக்கு மீண்டும் பதிவுசெய்தல் வேண்டும்.
9. நாளொன்றையும் நேரத்தையும் ஒதுக்கி திணைக்களத்திற்கு வருகை தருவதன் மூலம் தங்களுக்கு கடவுச்சீட்டு ஒன்றைப் பெறுவது இலகுவானது.
ஆனால் விண்ணப்பதாரிகளின் நலன்கருதி 24 மணி நேர சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஒன்லைன் மூலமாக பாஸ்போட் பெறுவதற்குத் திகதி ஒதுக்காதவர்கள் தமது அவசரத் தேவையை நிரூபிப்பதற்கான காரணத்தைக் குறிக்கும் ஆவணத்துடன் வருகை தந்து வரிசையில் நன்று பாஸ்போட்டைப் பெறலாம்.
இரவு பகல் 24 மணி நேர சேவை வெள்ளிக்கிழமைகளில் நடைபெற மாட்டாது. அது போல அரச பொதுவிடுமுறை வருவதற்கு முதல் நாளும் நடைபெற மாட்டாது.
# - பாஸ்போட் படம் எடுக்க அங்கீகரிக்கப்பட்ட படப்பிடிப்பு ஸ்ரூடியோ ஒன்றுக்குச் செல்லுங்கள்.
பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கலாம். ஆனால் ஆண்களோ பெண்களோ திருநீறு சந்தனம் வைத்துப் படம் எடுக்கக் கூடாது.
ஸ்ரூடியோவில் படம் எடுத்தால் அதனைப் பதிவு செய்து ஒன்லைன் பிறின்ற் தருவார்.உங்களது பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதியை ஏதாவது ஒரு பிரதேச செயலகத்தில் எடுங்கள். ஏற்கனவே கைவசம் இருக்குமாயின் அது கிழியாத பேப்பருள்ள பிரதி ஆயின் அது போதுமானது. ஆறு மாதத்துக்கு உட்பட்ட பிரதி எனத் தேவையில்லை.அது போல ஆங்கில மொழி பெயர்ப்பும் தேவையில்லை.
அதே போலத் தான் பெண்களும் தமது கணவரின் பெயர் மாற்றித் தேசிய அடையாள அட்டை எடுக்க வேண்டுமாயின் மேலே பிறப்புச் சான்றிதழ் தொடர்பான நடைமுறையே திருமணப் பதிவுச் சான்றிதழுக்குமானது.
# அரச தனியார் துறைகளில் உத்தியோகம் பார்ப்பவர்களாயின் தமது பதவிப் பெயரை இடுவதற்கு உங்களது மேலதிகாரியின் கடிதம் கடிதத் தலைப்பில் தேவையானது.
இறுதியாகப் பெற்ற பாஸ்போட் தொலைந்து போய் இருக்குமாயின் அதற்காகப் பொலிஸ் றிப்போட் பெறுவது கட்டாயமானது. பாஸ்போட்டின் செல்லுபடியாகும் திகதி இருந்தால் அதற்குரிய தண்டப்பணமாக 20 000 ரூபா செலுத்துல் வேண்டும்.
16 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளாயின் பெற்றோர் இருவரும் பிள்ளைகளுடன் செல்வது கட்டாயமானது.தமது பிள்ளை பாஸ்போட் பெறுவதற்குரிய சம்மதத்தைத் தாய் தந்தையர் இருவரும் வழங்க வேண்டும்.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையராயின் உங்களது நாடுகளிலுள்ள தூதரகங்கள் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்து இரண்டு வருடங்களுக்கு மேலாகப் பாஸ்போட் வரவில்லையெக் கூறுவோர் பலருண்டு.
வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரக உத்தியோகத்தர்கள் கொழும்பிலுள்ள பாஸ்போட் அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்புகின்றனர். ஆனால் இங்கு பாஸ்போட் அலுவலகத்தின் இரண்டாம் மாடியிலுள்ள வெளிநாட்டுக் கிளையினர் விண்ணப்பங்களை எடுத்து ஒளிக்கின்றனர். பின்னர் தரகர்கள் மூலமாக 02 முதல் 04 இலட்ச ரூபா வரை வாங்கிய பின்பு பாஸ்போட்டை வெளிநாட்டுக்கு உரியவருக்கு அனுப்பி வைப்பதாகப் பலரது குற்றச்சாட்டு உள்ளது.
உங்களது வற்ஸ் அப் இலக்கத்தைக் குறிப்பிட்டு உட்செய்திப் பெட்டி ஊடாகத் தொடர்பு கொள்ளுங்கள். பாஸ்போட்டைப் பெறுவதற்குரிய ஆலோசனைகளைத் தருவேன்.உதவுவேன்.
# வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்று இலங்கையில் இரட்டைப் பிரஜாவுரிமை பெற விரும்புவோர் உங்களது வற்ஸ்அப் இலக்கத்தைக் குறிப்பிட்டு உட்செய்திப் பெட்டி ஊடாகத் தொடர்பு கொள்ளுங்கள் உதவுவேன்.
பாஸ்போட் அலுவலகத்தில் உணவு இசிற்றுண்டி என்பவை வெளிக் கடைகளை விட 02 மடங்கு விலை. ஆகவே நீங்கள் வரும் போது பாஸ்போட் அலுவலகத்திற்கு 500 மீற்றர் தூரத்திலுள்ள உணவுக் கடைகளில் வாங்கவும். உங்களது பணத்தைச் சேமிக்கலாம்.
நண்பர்களே
விடுபட்ட தகவல்கள் ஏதும் இருக்கலாம். தட்டச்சுப் பிழை இருக்கலாம். எனனையறியாமல் தகவல் பிழைகள் இருக்கலாம். தெரியப்படுத்துங்கள்.
வேதநாயகம் தபேந்திரன்
25-05-2025
 

 

Leave a Reply