காசா பள்ளி மீது குண்டுவீசிய இஸ்ரேல் - குழந்தைகள் உட்பட 25 பேர் படுகொலை
அகதிகள் முகாமாக செயல்படும் காசா நகரில் உள்ள ஃபஹ்மி அல்-ஜர்ஜாவி பள்ளி மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் குழந்தைகள், இரண்டு செஞ்சிலுவைச் சங்க ஊழியர்கள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் ஆகியோர் அடங்குவர். இஸ்ரேல் தொடர்ந்து தங்குமிடங்களாக உள்ள பள்ளிகளைத் தாக்கி வருகிறது. காசாவில் உள்ள 95 சதவீத பள்ளிகளை இஸ்ரேல் தாக்கியுள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக காசா சிவில் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. 13 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிவில் பாதுகாப்பு துறை அறிவித்தது. 21 பேர் காயமடைந்தனர்.
குண்டுவெடிப்பில் பள்ளியின் பாதி பகுதி அழிக்கப்பட்டது. இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ளனரா என்பதைக் கண்டறிய மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
முந்தைய நாள், இஸ்ரேலின் தாக்குதல் காசா பெண் மருத்துவரின் 9 குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் காசாவில் இஸ்ரேலிய இராணுவத்தின் படுகொலையில் 53,901 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
1.22 லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இஸ்ரேல் தாக்குதலில் சுமார் 16,500 குழந்தைகள் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது.
மூன்று மாதங்களாக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் முற்றுகையால் காசா கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்கிறது.






















