• Welcome to TamilsGuide
செய்திகள் 1

1,000 திரைப்படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை புரிந்த ஆச்சி மனோரா

சினிமா

1958 ஆம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் தயாரித்த, 'மாலையிட்ட மங்கை',திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.
இவரை நாடகத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தி பல உதவிகளை செய்தவர் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.அவர்கள்.அதைப்பற்றி அடிக்கடி சொல்லி நன்றி மறவாமல் இருப்பார்.
அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா பல்கலைக் கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவப் படுத்தியது.
பத்மஸ்ரீ விருது இந்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவப்படுத்தியது.

தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் வரும் ஜில்ஜில் ரமாமணி கதாபாத்திரத்தை என்னால் மறக்கவே முடியாது.
சிவாஜியும் மனோராமா காம்பினேஷன் காட்சியை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.
தான் வைத்திருக்கும் நாயனத்தைக் கொடுத்து, 'உங்க நாயனத்திலதான் நல்லா வாசிக்கிறீங்களா,எல்லா நாயனத்திலேயும் நல்லா வாசிப்பீங்களான்னு பாப்போம்',என்று சொல்லி வாசிக்கச் சொல்லி கேட்பதும், அதற்கு சிவாஜி, 'மண்டு',என செல்லமாக திட்டி விட்டு வாசிக்கும் காட்சியானது மிகுந்த ரசனைக்குரிய காட்சியாக அமைந்திருக்கும்.
அந்தப்படத்தில் ஒரு காட்சியில் சிவாஜி,'அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா நீ எனக்கு தங்கையாகவும்,நான் உனக்கு அண்ணனாகவும் பிறக்க வேண்டும் ',என சொல்வார்.
அந்த வசனம் நிஜத்திலேயும் நடந்து விட்டதுதான் பெரும் ஆச்சர்யம்.
மனோராவின் தாய் இறந்த செய்தி கிடைத்தவுடனேயே சிவாஜி அவர்கள் மனோராமாவின் வீட்டிற்கு சென்று அவருடைய சகோதரன் செய்ய வேண்டிய இறுதிக் காரியங்களையும் செய்திருக்கிறார்.'தனக்கொரு உடன்பிறந்த அண்ணன் இல்லாத குறையை சிவாஜி அண்ணன் உடன் இருந்து செய்துவிட்டார்',என்று சிவாஜியைப் பற்றி பேட்டி கொடுக்கும் பொழுதெல்லாம் சொல்லி விடுவார்.
'கம்முனு கெட ',என்கிற ஒரே ஒரு வார்த்தையை வைத்து தியேட்டரையே சிரிப்பில் ஆழ்த்தியவர் மனோரா.படம் சம்சாரம் அது மின்சாரம்.மனோராமாவின் நடிப்புக்காகவே அக்கதாபாத்திரத்தை விரிவாக்கம் செய்தது அத்திரைப்படக்குழு.
மனோராமா தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் என்றுதான் சொல்ல வேண்டும்.
மனோராமா போன்ற சாதனையாளர்கள் தமிழ்சினிமாவில் கிடைப்பது இனி அரிதுதான்.

சே மணிசேகரன்

 

Leave a Reply