• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எனது உள்ளத்திலே ஏற்பட்ட புண்ணை நாடோடி மன்னன் என்ற படத்தால் தான் ஆற்றிக்கொள்ள முடிந்தது.

சினிமா

அதற்குள் எனக்கேற்பட்ட சோதனைகள் தான் எத்தனை !
இவனுக்கு எப்படியோ கொஞ்சம் புகழ் வந்துவிட்டது. அதற்குள் கிடைத்ததை வைத்து கொண்டு வாழ வகையறியாதவன் ? இது ஒரு வகை….

டைரக்டராமே டைரக்டர்… என்ற திமிர் !? இதுவும் ஒரு வகை.

லாட்டரி அடிக்கப்போகிறான்; நம் கண்ணால் காணப்போகிறோம்? இப்படி விரும்பியது ஒரு கூட்டம். (நான் கஷ்டப்பட்ட வாழ்க்கையிலிருந்தபோது இவர்கள் தான் என்னைக் காப்பாற்றியவர்கள் என்று எண்ணம் போலும்!) இப்படிச் செலவு செய்தால் இவன் எங்கே படத்தை முடிக்கப் போகிறான்… தனது விருப்பத்தை வேறு விதமாகக் கூறும் புத்திசாலிகள்.

எதை எதையோ எடுக்கிறான் ; திரும்பத் திரும்ப எடுக்கிறான் ; பாவம் மாட்டிகொண்டு முழிக்கிறான்?
- எனது நிலையைக் கண்டு மனதிலே உள்ள மகிழ்ச்சியை மறைக்க முடியாமல் வெளியே வரும் வார்த்தைகள்.

சீர்திருத்தமாம் சீர்திருத்தம்; அங்கே போய்விட்டு வரட்டும். ஒண்ணும் இருக்காது (தணிக்கைக் குழுவினரைப் பற்றிப்பேசும் வார்த்தை).
இவ்வாறெல்லாம் பேசுவதை என் காதுகளாலேயே கேட்டேன். அப்போதெல்லாம் எனக்கு ஏசுவின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வந்தன.
தான் செய்வது இன்னதென்றறியாத அப்பாவிகள்? இவ்வாறு எண்ணி நான் அவர்களைப் பார்த்துச் சிரித்தேன். அவர்களும் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள்.

ஒருவேளை என்னைப் பைத்தியக்காரன் என்று எண்ணி சிரித்தார்களோ, அல்லது என்னை?அப்பாவி? என்றெண்ணித்தான் சிரித்தார்களோ…எப்படியோ அவர்கள் அத்தனை பேரும் சிரித்தார்கள்.

படம் வெளியிடப்பட்டு, பத்திரிகைகள் புகழ்ந்து பாராட்டியதைக் கண்டு பாவம், அப்போது என்னைப் பார்த்துச் சிரித்தவர்கள் அழுதார்கள். அவர்களில் சிலர் இன்னும் அழுது கொண்டிருக்கிறார்கள். காரணம் என்ன? நான் தோல்வி அடைவதற்குப் பதிலாகத் தப்பிப்
பிழைத்து விட்டேனே என்பதற்காக…. இவர்கள் இவ்வாறு தொல்லைப்படுவதற்கு, நடக்கக் கூடாதது என்ன நடந்துவிட்டது.. தணிக்கைக்குழுவினர் ஒரு சிறு துண்டுகூட வெட்டவில்லையாமே ! படத்தை முடித்து வெளியிட்டு விட்டானே ! நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்களே…. மிக நன்றாக வசூல் ஆகிறதாமே….. நூறு நாட்களுக்குமேல் பல ஊர்களிலும் நடை பெறுகிறதாமே ! எங்கும் பாராட்டு விழாவாமே !
அடுத்த படம் பொன்னியின் செல்வனாமே ! ….
இவைகள் தான் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆத்திரத்திற்கும் துக்கத்திற்கும் காரணம் !
இதற்கு நான் என்ன செய்ய முடியும்…..

எனக்குத் தெரிந்ததை என்னுடைய மரியாதைக்கும், நம்பிக்கைக்கும் உரிய நண்பர்களின் துணை கொண்டு நிறைவேற்ற முயன்றேன். அது வெற்றி பெற்றதென்றால் இதற்கு யார் காரணம் , இந்த வெற்றி யாருக்கு?

உண்மைக்கும், உழைப்புக்கும், நேர்மைக்கும், நியாயத்திற்கும், அன்புக்கும், ஆர்வத்துக்கும் கிடைத்த வெற்றியாகும். வெற்றியென்ற பதம் இதற்குப் பொருத்தம் தானென்றால் அந்த வெற்றி தனிப்பட்ட எவர்க்கும் சொந்தமானதல்ல !"

- நாடோடி மன்னன் வெற்றிவிழா
மலரில் பொன்மன செம்மல் எம் ஜி ஆர் அவர்கள்.

Leave a Reply