மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி-கொம்மாதுறையில் வசித்து வரும் கிஷன்ராஜ் மற்றும் பிரதீபா தம்பதியரின் மகளான தன்ய ஸ்ரீ என்ற 2 வயதுக் குழந்தை ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற 195 நாடுகளின் தலைநகரங்களின் பெயர்களை குறைந்த நேரத்தில் ஒப்புவித்து சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.
குறித்த நிகழ்வு நேற்றைய தினம் மட்டக்களப்பு கிரீன் கார்டன் ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது.
இதன் போது நடுவர்களான சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைச் செயலாளர் கதிரவன் த. இன்பராசா, மட்டக்களப்பு மாவட்டத்தின் பொதுத் தலைவர் சிவ வரதகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர் கவிஞர்.அ.தனுராஜ் போன்றோர் சிறுமியின் உலக சாதனை முயற்சியை முழுமையாகக் கண்காணித்து உறுதி செய்தனர்.
சோழன் உலக சாதனை படைத்த சிறுமி தன்ய ஸ்ரீ க்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், நினைவுக் கேடயம், தங்கப் பதக்கம், அடையாள அட்டை போன்றவை சிறப்பு விருந்தினர்களால் வழங்கிப் பாராட்டப்பட்டது.
சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனமும் பீபல்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை கதிரவன் சமூக அபிவிருத்திக் நிறுவனம் ஒருங்கிணைத்து நடத்தியிருந்தது.
நிகழ்விவின் முதன்மை விருந்தினராக பங்கேற்றிருந்த மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் திரு நா. தனஞ்செயன் உலக சாதனை படைத்த சிறுமியை வாழ்த்திப் பாராட்டினார்.
மட்டு செங்கலடி மத்திய கல்லூரியின் தலைமை ஆசிரியர் க.சுவர்னேஸ்வரன், தொழில்நுட்பக் கல்லூரி அதிபர் திரு மா.சோமசூரியம், கல்குடா வலய ஆசிரியர் ஆலோசகர் சுகந்தி நிரஞ்சன் போன்றோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.