காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதையடுத்து இந்தியா பதிலடி தாக்குதல் கொடுத்தது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்தது. இதை முறியடித்த இந்திய ராணுவம், பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மற்றும் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. 4 நாட்கள் சண்டைக்கு பிறகு இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில் விமானப்படை தளத்தை இந்தியா தாக்கியது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் நினைவுச் சின்னத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஷபாஸ் ஷெரீப் பங்கேற்று பேசியதாவது:-
மே 9, 10-ந்தேதி இடைப்பட்ட இரவில் சுமார் 2.30 மணியளவில் ராணுவத் தலைவர் அசிம் முனீர், என்னை தொடர்பு கொண்டு இந்திய ஏவுகணைகள் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப் படை தளம் மற்றும் பிற பகுதிகளை தாக்கியதாக தகவல் தெரிவித்தார். இது மிகவும் கவலைக்குரிய தருணமாக இருந்தது.
அவரது குரலில் தன்னம்பிக்கை மற்றும் தேசபக்தி இருந்ததை கடவுள் மீது சத்தியம் செய்வதன் மூலம் நான் உங்களுக்குச் சொல்ல முடியும்.
அதன்பின் நான் எனது பாதுகாப்பான தொலைபேசியை எடுத்துக்கொண்டு நீச்சலடிக்கச் சென்றேன். அப்போது ராணுவ தளபதி 2-வது முறையாக என்னை தொடர்பு கொண்டு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பதிலடி கொடுத்ததாக தெரிவித்தார்
நமது நாட்டைக் காப்பாற்ற நமது விமானப்படை உள்நாட்டு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியது. மேலும் சீன ஜெட் விமானங்களிலும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது.
இவ்வாறு அவர் பேசினார்.