நாட்டில் பல பகுதிகளிலும் பெய்துவரும் கன மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் வீசிய சூறாவளிக்காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் இன்று காலை ஏழுமணியளவில் கடும் சூறாவளிக்காற்று வீசியதுடன்,மழையும் பெய்துள்ளது இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், மின்தடையும் ஏற்ப்பட்டுள்ளது.
குறிப்பாக வவுனியாநகரப்பகுதியில் இருந்த நடைபாதை விற்பனை நிலையங்கள் காற்றில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நகரம் உட்பட பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்தமையால் சில பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது.
தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதுடன்,மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை -மன்னாரில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை கடும் காற்று வீசியதுடன்; மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பலத்த காற்று மற்றும் மழை காரணமாக மன்னார் பேசாலை கிராம மீனவர்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதுடன் இன்றுகாலை கடற்தொழிலுக்கு சென்றிருந்த மீனவர்கள் அவசரமாக கரைக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.
மேலும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட டோலர் படகுகள் காற்றில் சிக்கிய நிலையில் படகுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மன்னார் பிரதேச தாழ் நிலப்பகுதிகள் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.