தொடருந்து நிலைய அதிபர்களின் பணிபுறக்கணிப்பு காரணமாக நேற்று இரவு(16) முதல் பதுளையில் இருந்து புறப்படும் அனைத்து தொடருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நேற்று மாலை 6.30 மணிக்கு பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அஞ்சல் தொடருந்து, பணிபுறக்கணிப்பு காரணமாக உடுவர தொடருந்து நிலையம் வழியாக பதுளைக்கு திரும்பியது.
மேலும், தொடருந்து நிலையங்களில் பயணச்சீட்டுக்காக வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் பயணிகளுக்கு திருப்பிக் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, உடரட மெனிகே, பொடி மெனிகே, கலிசோ தொடருந்து, அஞ்சல் தொடருந்து, மற்றும் விசேட தொடருந்து என்பன பதுளை தொடருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் இன்று காலை வேளையில் 23 தொடருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியமர்த்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படும் இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக, இன்றைய தினம்(17) நீண்ட தூர சேவைகள் இடைநிறுத்தப்படுவதாக தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.