TamilsGuide

உயிருடன் இருக்கும்போது நம்மைச் சுற்றி ஒரு ஒளி இருக்கிறது.. மரணத்துடன் மறைகிறது - ஆய்வில் சுவாரஸ்யம்

அனைத்து உயிரினங்களும் இறந்தவுடன் மறைந்து போகும் ஒரு சிறப்பு பிரகாசத்தைக் கொண்டிருப்பது அறிவியல் பூர்வமான ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

கனடாவின் கால்கரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு 'ஜர்னல் ஆஃப் பிசிகல் கெமிஸ்ட்ரி லெட்டர்ஸ்' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி ஆய்வானது, இந்த தன்மையை, அல்ட்ராவீக் ஃபோட்டான் உமிழ்வு ( UPE ) என்று விவரிக்கிறது.

ஒரு ஃபோட்டான் என்பது ஒளி மற்றும் பிற மின்காந்த அலைகளின் அடிப்படை துகள் ஆகும்.

அதாவது, அவற்றை ஒளியின் மிகச்சிறிய வெளிப்பாடு எனலாம். உயிரினங்கள் உடலில் ஆற்றலை உற்பத்தி செய்யும்போது, அந்த வேதியியல் எதிர்வினைகளின் விளைவாக மிகக் குறைந்த அளவிலான ஃபோட்டான்களை வெளியிடுகின்றன.

இதன் விளைவாக, உயிருள்ள உடலைச் சுற்றி மிகச் சிறிய ஒளி உருவாகிறது. உயிர் பிரிந்ததும் ஆற்றல் உற்பத்தி நின்றுவிடுவதால் அந்த ஒளி மறைகிறது. இந்த ஒளி மிகவும் மெல்லியதாக இருக்கிறது. இது 200 முதல் 1000 நானோமீட்டர்கள் வரையிலான வரம்பில் உள்ளது.

இது அனைத்து உயிரினங்களிலும் காணக்கூடிய ஒரு இயற்கை நிகழ்வு என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்குகிறார்கள்.
 

Leave a comment

Comment