காசாவில் உள்ள கான் யூனிஸில் புதன்கிழமை இரவு மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 57 பேர் கொல்லப்பட்டதாக நாசர் மருத்துவமனையின் சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.
வடக்குப் பகுதியில், காசா நகரம் மற்றும் ஜபாலியாவில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு நடத்தியது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், இஸ்ரேலிய போர் விமானங்கள் கான் யூனிஸில் ஒன்பது வீடுகளைத் தாக்கின.
இந்த வீடுகளில் இருந்த முழு குடும்பங்களும் தாக்குதலில் கொல்லப்பட்டன. ஜபாலியா அகதிகள் முகாம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் 13 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தொடர் தாக்குதலால் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க முடியாத சூழல் நிலவுகிறது. இஸ்ரேலின் கட்டாய வெளியற்றம் காரணமாக மக்கள் தாக்குதலில் இருந்து தப்பிக்க வீடுகள் மற்றும் முகாம்களை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இதுபோல நேற்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் விடியற்காலையில் இருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 107 பேர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக காசாவின் சிவில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பாசல் உறுதிப்படுத்தினார். இதில் முழு குடும்பங்களும் அடங்கும்.
வடக்கு காசாவில் உள்ள ஜபாலியாவின் அல் ஃபகூரா பகுதியில் உள்ள அல் தவ்பா சுகாதார மருத்துவமனை மீது இஸ்ரேலிய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும் மக்கள் காசா பகுதியின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக தெற்கு நகரமான கான் யூனிஸில், இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் கூடாரங்களை போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கின.
இதற்கிடையே இன்று (வெள்ளிக்கிழமை) கடந்த சில மணி நேரத்தில் வடக்கு காசா மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதல்களில் 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இதனால் 2023 அக்டோபரில் இருந்து இஸ்ரேலிய தாக்குதலால் காசாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 53,000 த்தை கடந்துள்ளது. டிரம்ப் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சூழலில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. காசாவை 'சுதநதிர மண்டலம்' ஆக மாற்ற வேண்டும் என்ற திட்டத்தை டிரம்ப் முன்வைத்துள்ளார். காசாவை முழுமையாக கைப்பற்ற சமீபத்தில் இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.