TamilsGuide

இஸ்ரேலுடனான பொருளாதார ஒத்துழைப்பு குறித்த இலங்கையின் நிலைப்பாடு

இஸ்ரேல் வசம் உள்ள பாலஸ்தீன பகுதிகளுக்கான வேலைவாய்ப்புக்காக இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரத்நாயக்க,

இஸ்ரேலுடன் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளைப் பேணும் பல நாடுகளைப் போலவே, இலங்கையும் நாட்டின் பொருளாதாரத்தின் நலனுக்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்புவத‍ை தொடர வேண்டும்.

இஸ்ரேலுடனான உறவுகளை இலங்கை திடீரென முறித்துக் கொண்டால், பொருளாதாரம் வீழ்ச்சியடையும். இதன் விளைவாக இஸ்ரேலில் தற்போது பணிபுரியும் பல இலங்கையர்கள் வேலை இழக்க நேரிடும். இதை நாம் செய்ய முடியாது.

பாலஸ்தீனத்துடன் நிற்கும் ஆனால் இராஜதந்திர மற்றும் பொருளாதார நோக்கங்களுக்காக இஸ்ரேலுடன் உறவுகளைத் தொடரும் சவுதி அரேபியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளைப் போலவே இலங்கையும் செயல்படும்.

நாங்கள் ஒரு சுதந்திர பாலஸ்தீன அரசு மற்றும் ஒரு சுதந்திர இஸ்ரேல் அரசு ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

இலங்கை அவற்றை இரண்டு தனித்தனி அரசாங்கங்களாகக் கருதுகிறது.

எனவே, இலங்கை இஸ்ரேலுடன் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளைத் தொடர வேண்டும் – என்றார்.

பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் காரணமாக, இலங்கை இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அண்மையில் கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
 

Leave a comment

Comment