TamilsGuide

கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்கள்

ஆனையிறவு தேசிய உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இன்றையதினம் கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது ” தற்போதுள்ள பொது முகாமையாளர், முகாமைத்துவ பிரிவினர், உதவி முகாமையாளர், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் தம்மை பழிவாங்குவது போல் செயற்படுகின்றனர் எனவும் தமக்கு உரிய வகையில் வேலைகளை வழங்குவதில்லை” எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

மேலும் குறித்த உப்பளத்தில் குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லை எனவும், இந்த மாதம் தொடங்கி இதுவரை தமக்கு 4 நாட்களே வேலை வழங்கப்பட்டது எனவும், மனித வலு இருக்கும்போது இயந்திரவலுவினையே  உப்பள நிர்வாகத்தினர்  பயன்படுத்துகின்றனர் எனவும் போராட்டக்காரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த உப்பளத்தில்  பணி புரியும் தமக்கு சீருடைகளோ, பாதுகாப்பு கவசங்களோ வழங்கப்படுவதில்லை எனவும் குற்றம் சுமத்திய போராட்டக்காரர்கள் இவ் உப்பளத்தை திறந்து வைக்கும்போது 8ஆயிரம் ரூபா பெறுமதியான உலருணவு பொதி வழங்குவதாக அமைச்சர் கூறிய போதும் 800 ரூபா பெறுமதியான உலருணவுப்பொதியே தமக்கு வழங்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தடன் ஊழியர்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் அதிகாரியை இடமாற்றம் செய்கின்றனர் எனவும், இங்கு பணிபுரியும் முகாமையாளர் உள்ளிட்ட பலர்  பணி தொடர்பான அடிப்படை அறிவற்றவர்களாகவே காணப்படுகின்றனர் எனவும், அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பினை ஹம்பாந்தோட்டை, மன்னார், புத்தளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று அங்கு வைத்து பொதியிட்ட பின்னர் மீண்டும் எமது பகுதிகளுக்கு கொண்டுவந்து விநியோகம் செய்கின்றனர் எனவும், இதனால் இரண்டு போக்குவரத்து செலவு காரணமாக உப்பின் விலையை அதிகரித்து விற்பனை செய்கின்றனர் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தமது பகுதியில் விளையும் உப்பினை இங்கேயே வைத்து பொதியிடக்கூடிய வசதி இருந்தும் ஏன் வெளி மாவட்டம் கொண்டு செல்ல வேண்டும்? எனவும்  கேள்வி எழுப்பிய ஊழியர்கள்   இங்கு காணப்படும் பிரச்சினைகளுக்கு உரிய அதிகாரிகள் உடனடியாகத் தீர்வினைப் பெற்றுத் தருமாறும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

Leave a comment

Comment