பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பு கடந்த 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது.இதில் 1,200 பேர் வரை உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் இதுவரை 52,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை ஏற்பட்ட போர் நிறுத்தத்தின் போது பல பணய கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.
இந்நிலையில் ஹமாஸ் தங்களிடம் இருந்த கடைசி அமெரிக்க-இஸ்ரேலிய பிணைக் கைதி ஐடன் அலெக்சாண்டரை விடுவித்துள்ளது. அவர் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இஸ்ரேலுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இஸ்ரேலிய இராணுவமும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.
சிப்பாய் அலெக்சாண்டர் இஸ்ரேலிய இராணுவ முகாமில் இருந்து ஹமாஸால் கடத்தப்பட்டு ரகசிய இடங்களில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது அவரின் விடுதலை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அரசுக்கு அனுப்பப்பட்ட நல்லெண்ண சைகையாகும்.
கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளுக்கு டிரம்ப் பயணம் புறப்பட்டுள்ள சூழலில் இந்த விடுதலை நிகழ்ந்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா முக்கிய பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
தனி விமானத்தில் அமெரிக்காவில் இருந்து புறப்படும் டிரம்ப், இன்று (செவ்வாய்க்கிழமை) சவுதி தலைநகர் ரியாத் சென்று, புதன்கிழமை நகரில் நடைபெறும் வளைகுடா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார். பின் அங்கிருந்து கத்தாருக்குச் சென்று வியாழக்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தனது பயணத்தை முடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.