பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் கிட்டதட்ட முடியும் தருவாயில் உள்ளது. இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், 'தக் லைப்' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நடிகர்கள் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா, அசோக் செல்வன் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இந்தியாவின் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் பேச உள்ளதாக கூறி கமல்ஹாசன் தனது பேச்சை தொடங்கினார். இது அரசியல் எல்லாம் இல்லை. இது தமிழனின் எதார்த்தம். விருந்தோம்பல் என்பது தமிழனின் 2000 ஆண்டு பழக்கம் என்று கூறி ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:- மணிரத்னத்துடன் இணைந்து படத்தில் நடிப்பதற்கு மக்களின் தீர்ப்பே காரணம். மணிரத்னத்துக்கு அஞ்சரை மணிரத்னம் என்ற பட்டப்பெயர் வைத்துள்ளேன். அதுக்கு காரணம் படப்பிடிப்பு காலை 5 மணிக்கே வந்துவிடுவார். சிம்புவின் அப்பாவிற்கு என் மேல் பாசம் அதிகம். எனக்கு ஏதாவது ஒன்று என்றால் அழுதுவிடுவார். அது ஒரு தலைமுறை. இன்றைய தலைமுறையான சிம்பு எப்படி என்றால் பாசத்தில் டி.ஆர். 8 அடி என்றால் இவர் 16 அடி பாய்ந்து உள்ளார். இந்த டயலாக் படத்திலும் இருக்கு. அவரைப் பார்த்து நான் சொல்ற மாதிரி. பொறாமையும் போட்டியும் நிறைந்த திரைத்துறையில் இப்படியெல்லாம் நட்பு கிடைப்பது மிகவும் கஷ்டம். மேடையில் இருக்கிற இந்த 2 கதாநாயகிகளும் இந்த படத்துல ஒரு தடவை கூட என்னை பார்த்து ஐ லவ் யூ சொல்லலை. ஆனா தினந்தோறும் காலை, மாலை எப்போது ஷூட்டிங்கிற்கு வந்தால் என்னை பார்த்து சார், ஐ லவ் யூ சொன்ன ஒரே ஆள் ஜோ ஜோ தான். அதனால மனசை கொஞ்சம் தேற்றிக்கொண்டேன் என்றார்.
இதனை தொடர்ந்து படத்தில் நடித்த நடிகர் அசோக் செல்வன், மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குறித்து கமல் பேசினார். பேச்சு தொடக்கத்தில் ஆங்கிலத்தில் பேச தொடங்கிய கமல் பின்னர் தமிழில் பேசினார்.


