தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் சிவா, 2011-ம் ஆண்டில் 'சிறுத்தை' படத்தை இயக்கி அறிமுகமானார். கார்த்தி, தமன்னா நடித்த இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தின் மூலம் சிறுத்தை சிவா என்றே அவர் அழைக்கப்படுகிறார்.
அதனைத்தொடர்ந்து அஜித்குமாரை வைத்து 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்', 'விஸ்வாசம்' என தொடர் வெற்றி படங்களை இயக்கி கவனம் ஈர்த்தார். ரஜினிகாந்தை வைத்து 'அண்ணாத்த', சூர்யாவை வைத்து 'கங்குவா' படங்களை இயக்கினார். கங்குவா படத்தில் கார்த்தி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
இந்தநிலையில் 14 ஆண்டுகளுக்கு பிறகு சிவா - கார்த்தி கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படம் அதிரடி படமாக எடுக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. கார்த்தி தற்போது 'சர்தார்-2', 'வா வாத்தியாரே' படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் 'கைதி-2' படத்தில் நடிக்க போவதாகவும் பேசப்படுகிறது.
இந்த படங்களை தொடர்ந்து கார்த்தி - சிவா கூட்டணி கைகோர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறது.