TamilsGuide

பரிதாபத்தோடும் வியப்போடும் எம்.ஜி.ஆர்.கேட்டார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பார்வைத் திறன், செவித் திறன் இழந்தோர் பள்ளி ஒன்றின் விழாவில் கலந்துகொள்ள எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடப்பட்டது. அதை ஏற்று அந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். இந்த விழாவில் ‘கர்நாடக எம்.ஜி.ஆர்.’ என்று அழைக்கப்படும் பெருமை பெற்ற நடிகர் ராஜ்குமாரும் கலந்துகொண்டார்.

விழாவில் எம்.ஜி.ஆர். பேச ஆரம்பித் ததும் அவரது பொன்மனம் வார்த்தைகளாய் வெளிப்பட்டது. அந்தப் பள்ளியின் வளர்ச்சிக் காக ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார். விழி இழந்தவர்கள் பார்க்க முடியாவிட்டாலும் அவர் அறிவிப்பைக் கேட்டு கரவொலி எழுப்பினர். இதைப் பார்த்து காது கேளாதோரும் கைதட்டினர்.

உணர்ச்சிமயமான இந்தச் சூழலில் எம்.ஜி.ஆர். பேசியது மேலும் உள்ளத்தை நெகிழ வைத்தது. அந்த பள்ளிக்கு, தான் நிதி வழங்குவதற்கான காரணம் என்ன என்பதை எம்.ஜி.ஆர். தனது பேச்சில் குறிப்பிட்டார். ‘நாடோடி மன்னன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு எம்.ஜி.ஆருக்கு கண் திருஷ்டி போல, சீர்காழியில் ‘இன்பக் கனவு’ என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது கால் முறிந்துபோனது.

நாடகத்தில் பெண்ணை ஒருவன் மான பங்கம் செய்வது போல ஒரு காட்சி. அந்தக் காட்சியில் நடித்தவர் நடிகர் குண்டுமணி. பெயருக்கேற்றபடி சிறு குன்று போலவே இருப்பார். பெண்ணைக் காப்பாற்ற குண்டுமணியுடன் எம்.ஜி.ஆர். சண்டையிடும் காட்சிதான் அவரது அறிமுகக் காட்சி.

மக்களின் ஆரவாரத்துக்கிடையே குண்டு மணியை எம்.ஜி.ஆர். தனது வலிமையான கரங்களால் ‘அலாக்’காக தலைக்கு மேல் தூக்குவார். அன்று அந்தக் காட்சியில் நடிக் கும்போது சமநிலை தவறி எம்.ஜி.ஆருக்கு கால் முறிந்துவிட்டது. சென்னை திரும்பிய எம்.ஜி.ஆர். 6 மாதங்கள் சிகிச்சை காரண மாக ஓய்வில் இருக்க வேண்டிய நிலை.

சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரை சந்திக்க பார்வையற்றவர்கள் இரண்டு பேர் வந்தனர். அவர்களை உள்ளே அனுமதிக்கச் சொன்ன எம்.ஜி.ஆர். ‘‘எதற்காக இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்தீர்கள்?’’ என்று பரிவுடன் கேட்டார்.

‘‘உங்களைப் பார்க்கத்தான் வந்தோம்’’ என்று பதில் வந்தது.

‘‘என்னைப் பார்க்கவா?’’ பரிதாபத்தோ டும் வியப்போடும் எம்.ஜி.ஆர்.கேட்டார்.

‘‘ஆமாம். உங்களைப் பார்ப்பதற்குதான் வந்தோம். பார்வை இழந்த நாங்கள் எப்படி உங்களைப் பார்க்க முடியும் என்று ஆச்சரியப்படுகிறீர்களா? எல்லாரையும் போல உங்களை பார்ப்பதற்கு எங்களுக்கு புறக் கண்கள் இல்லையே தவிர, எங்கள் அகக் கண்களில் நீங்கள் ஆழமாக பதிந்திருக்கிறீர்கள். உங்களை எங்கள் கரங்களால் தொட்டு, ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டுப் போகலாம் என்று வந்தோம்’’ என்று அவர்கள் சொன்னபோது அவர்களது அன்பில் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.

இந்த சம்பவத்தை மேடையில் விவரித்து விட்டு தொடர்ந்து பேசும்போது எம்.ஜி.ஆர். கூறினார்... ‘‘இதுபோன்று என் மீது அன்பு செலுத்துவதற்கு லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள் என்ற எண்ணமே எனக்கு அதிக தன்னம்பிக்கையை கொடுத்ததோடு, நான் விரைவில் குணமடையவும் உறுதுணை யாக இருந்தது. கண்களை இழந்த அவர்கள் என் மீது காட்டிய அன்பு எனது வாழ்நாளில் மறக்க முடியாததாக அமைந்துவிட்டது. அவர்களுக்கெல்லாம் என் வாழ்நாளில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று சிறிய உதவி செய்யும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்.’’

எம்.ஜி.ஆர். இதை சொன்னபோது உணர்ச்சி மேலிட கலங்கிய கண்களுடன் கூட்டத்தினர் எழுப்பிய கரவொலி பெங்களூர் முழுவதும் எதிரொலித்தது.

- தி இந்து .

Leave a comment

Comment