மியான்மர் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. மியான்மரில் இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து குவியல் குவியலாக உடல்கள் மீட்க்கப்பட்ட வண்னம் உள்ளன.
இந்நிலையில் மியான்மரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் 3,900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது ரமலானையொட்டி நாடு முழுவதும் மசூதிகளில் பெருந்திரளாகத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் மக்கள் சுமார் 700 பேரும், புத்த மடாலயத்தில் திரண்டிருந்த சுமார் 270 புத்தபிட்சுகளும் உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் ஒரு நாட்டில் பசி மற்றும் நோய் பரவல் மோசமடையக்கூடும் என்றும், மனிதாபிமான உதவிகள் சென்று சேர்வதில் தடை ஏற்பட்டுள்ளதாவும் உதவி குழுக்களும், ஐக்கிய நாடுகள் சபையும் எச்சரித்துள்ளன.
குடிநீர் மற்றும் மின்சாரம் தடை, எரிபொருள் பற்றாக்குறை மற்றும் தகவல் தொடர்பு நெட்வொர்க்கிகளில் சிக்கல் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க சவால்கள் நிவாரண பணிகளில் தொய்வை ஏற்படுத்தி வருகின்றன. கனரக உபகரணங்களின் பற்றாக்குறை மீட்பு நடவடிக்கைகளை மெதுவாக்கியுள்ளது.