மக்கள் எதிர்பார்த்த எதனையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை! எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு
இலங்கை
நாட்டில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பிரச்சினைகள் ஏற்படும் போது மாற்று ஏற்பாடுகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”நாட்டின் தற்போதைய நிலையைப் பார்க்கும் போது
மக்கள் எதிர்பார்த்த எதனையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
நிறைவேற்ற முடியாத எதிர்பார்ப்புகளை வழங்கி விட்டு ஆளும் தரப்பினர் தற்போது, திணறி வருகின்றனர். வலுவான வேலைத்திட்டமும் அதற்குத் தேவையான தொலைநோக்குப் பார்வையும் இந்த அரசாங்கத்திடம் இல்லை. அரசாங்கத்தின் பேச்சுக்கள் நன்றாக இருக்கின்றது. ஆனால் செயல் பலவீனமாகவும் மெத்தன போக்கிலும் காணப்படுகின்றன.
மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு மாற்றுவழி இந்த அரசிடம் இல்லை. மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் போது மாற்று வாழ்வாதார ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். ஆனால் அவ்வாறான புதிய ஏற்பாடுகள் இந்த அரசிடம் இல்லை. பொருட்களுக்கு கூட தட்டுப்பாடுகள் நிலவுகின்றன.
அரிசி, தேங்காய்க்கும் கூட தட்டுப்பாடு உள்ளது. இறக்குமதி பொருட்களுக்கு கூட தட்டுப்பாடுகள் நிலவுகின்றன.
மின்சார கட்டணம் 33 சதவீதத்தால் குறைக்கப்படும் என்று கூறப்பட்டாலும், இன்னும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
மின்சார சபைக்கு அதிக இலாபம் கிடைத்தாலும் மக்களுக்கு அதன் பலாபலன்கள் கிடைக்கப்பெறவில்லை.
இன்று கூட்டுறவு சங்கத் தேர்தல்களின் மூலம் மக்களின் அபிப்பிராயம் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
மக்களின் எதிர்ப்பு அரசாங்கத்துக்கு சுமையாக மாறியுள்ளது. அரச உத்தியோகத்தர்கள் சம்பள உயர்வை எதிர்பார்த்து இருக்கின்றனர். தனியார் துறையிலும் அரச சேவையிலும் உள்ள பணியாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படவேண்டும்” இவ்வாறு சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.