உள்ளூராட்சி தேர்தல்; வரைவு சட்டமூலம் வர்த்தமானியில்
இலங்கை
2023 தேர்தலுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கும் புதிய வேட்புமனுக்களை கோருவதற்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வரைவு சட்டமூலம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக பின்னர் ஒரு திகதியில் சமர்ப்பிக்கப்படவும் உள்ளது.
2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டத் திருத்தச் சட்டமூலம் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் உத்தரவிற்கு அமைய அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சட்டமூலத்தின் பிரகாரம், 2023 மார்ச் 09 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் செல்லுபடியாகாது.
ஒரு அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களைப் பொறுத்தவரையில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறவும் இந்த வர்த்தமானி வழிவகை செய்கிறது.
அதற்கான சட்டமூலம் நாடாளுமன்ற்த்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர் இந்த சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இதன்படி, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான புதிய வேட்புமனுக்களை கோரும் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும்.
அந்தத் திகதியானது மேற்படி சட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு 3 மாதங்களுக்கு முந்திய திகதியாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.